2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தோட்டத் தொழிலாளர்களின்சம்பள விவகாரம் சூடுபிடிப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

செவ்வாய்க்கிழமைக்கு பின் மீண்டும் பேச்சு

'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இருவார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,  அண்மையில், இரண்டுமுறை பேச்சு நடத்தினோம். சம்பளப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பதென்பது தொடர்பில் செவ்வாய்க்கிழமைக்கு (இன்று) பிறகு மீண்டும் பேச உள்ளோம் என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான தெரிவித்தார்.

பெருந்தோட்ட பகுதியில் மூடப்பட்டிருக்கும் தேயிலைக் காணிகளை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க பெருந்தொட்ட கம்பனிகளிடம் இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர் பிள்ளைகளும் எதிர்காலத்தில் சிறு தேயிலைத் தோட்ட முதலாளிகள் என்ற அந்;;தஸ்த்தைப் பெறுவதுடன் தமது இருப்பிடத்தினையும் தக்கவைத்து கொள்ளும் வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தனை கிறேக்லி தோட்டத்தில், அவரது பன்முகப்படுத்தப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை (21) மாலை திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

"தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் இ.தொ.கா இதொழில் அமைச்சர் மற்றும் கம்பனிகளிடம் பேசி ஒரு கணக்கை அறிவித்துள்ளது. அதேவேளை, பதுளை பகுதி மக்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவாக 1,000 ரூபாய் கிடைத்ததாகக் கூறினார்கள் ஆனால், இ.தொ.காவின் நோக்கம் சம்பள உயர்வைப் பெற்றுதருவதே தவிர, இந்த இடைக்காலக் கொடுப்பனவு தொடர்பில் பெற்று கொடுத்தவர்களிடமே இதைக் கேட்க வேண்டும் என்றேன்.

இருந்தும், அன்று இடைக்கால கொடுப்பனவுக்கு இ.தொ.கா ஆதரவளித்தது காரணம், எம்மக்களுக்கு ஒரு வருமானம் கிட்டுகின்றது என்பதால் தான். சிலர் பேசுகிறார்கள் கூட்டொப்பந்தத்தை கிழித்தெரிய வேண்டும் என்று ஆனால், இந்த கூட்டொப்பந்தம் மூலம் தான் பெட்டிக் காசு, கோயில் காசு உட்பட தொழிலாளர் பிறப்பு முதல் இறப்பு வரையிலான உரிமைகளும் கிடைக்கின்றன. அத்தோடு, கம்பனிகள் 25 நாள் வேலை வழங்குவதும் இந்த கூட்டொப்பந்த அடிப்டையில் தான் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேவேளை, கூட்டொப்பந்தத்திடம் நாம் முன்வைத்துள்ள கோரிக்கை சரிவருமானால் சம்பள உயர்வு ஊடான கையொப்பமும் இடப்படும்" என்றார்.

பெருபான்மை மக்களின் பிள்ளைகள் அரசாங்க தொழிலை செய்தாலும் அவர்கள் 2 அல்லது 3 ஏக்கர் தேயிலை காணிகளை சிறு தோட்டமாக நடத்தி வருகின்றார்கள்.

இந்த வாய்ப்பு நமது பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் தான் நான் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசியுள்ளேன். எங்கெல்லாம் தேயிலை மலைகள் மூடப்பட்டுள்ளதோ அவைகளை எமது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து அவர்களையும் சிறுதோட்டங்களுக்கு உரிமையாக்கி முதலாளிகளாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

சிறுதோட்ட சபை என்று ஒன்றுள்ளது இதன் மூலம் பதிவுசெய்து சிறு தோட்டத்துக்கான சலுகைகளை பெற்றுக்கொண்டு, கிடைக்கும் 2 அல்லது 3 ஏக்கர்களை பராமரித்து முன்னேற்றம் அடையலாம். அதேவேளை, கம்பனிகளுக்கு 35 வருடங்கள் குத்தகை காலம் இருந்தாலும் அதே 35 வருடம் சிறுதோட்ட பராமரிப்புக்கும் எமது தொழிலாளர்களின் பிள்ளைகளை உள்வாங்கி பிரித்து கொடுங்கள் என்று கம்பனிகளுக்கு வழியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு நம்மில் உள்ளவர்கள் அரச தொழிலை மேற்கொண்டாலும் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் சிறு தோட்டத்தை பராமரித்து முதலாளிகள் அந்தஸ்த்தை பெறுவதுடன் இருப்பிடத்தினையும் தக்கவைத்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

முதலாளிமார் இன்று அறிவிப்பர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், இன்று செவ்வாய்க்கிழமை (23) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையிலேயே, முதலாளிமார் சம்மேளத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தை, 2015ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன்; முடிவடைந்தது. இந்நிலையில்,  2015 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல், 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையிலும் 6 கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் அதன் பின்னர் அப்பேச்சுவார்த்தைகள் கிடப்பில் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .