Kogilavani / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி, எஸ்.சுஜிதா
மலையக மக்களை லயன் வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்தது தாம்தான் என தொழிற்சங்கத் தலைவர்கள் என்னதான் மார்தட்டிக் கொண்டாலும், மாடி வீட்டுத் திட்டத்திலும் அம்மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவது குறித்து, அந்தத் தலைவர்களில் செவிகளுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை.
மலையக தொடர்மாடி குடியிருப்பானது, 2002ஆம் ஆண்டில் லிந்துலை, என்போல்ட் குரூப், கலிடோனியா தோட்டத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இத்தோட்டத்தின் மேற்பிரிவு, கீழ்பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் சுமார் 300இற்கும் மேற்பட்ட, ஒரு மாடியை கொண்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
2003ஆம் ஆண்டில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. நீண்ட லயன்கள் இருந்த இடங்களில் மாடிவீடுகள் கம்பீரமாக காட்சியளித்தன. ஆனால், 'என்னதான் மாடி வீட்டில் வசித்தாலும், லயனில் இருந்த நிம்மதியை நாம் தொலைத்துவிட்டோம்' என்பதே தற்போது அத்தோட்டத்து மக்களின் அங்கலாய்ப்பாக உள்ளது.
இத்தோட்டத்தில் வாழும் சுமார் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல்வேறு பிரச்சினைகளுடனே இங்கு வாழ்;ந்து வருகின்றனர். தரைப் பகுதியில் ஒரு வரவேற்பறை, சமையலறை, சமையலறைக்கு அருகில் மலசலகூடம், மேல் மாடியில் இரண்டு அறைகள், பெல்கனி என்பவற்றைக் கொண்டதே இந்த மாடிவீடு. ஒவ்வொரு பிரிவுகளும் ஆங்கில எழுத்தைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றன. இங்கு சிலரது வீடுகளுக்கு முன்பாகவும் பின்பாகவும் தாராளமாக இடமிருந்த போதிலும் பலர் இடநெருக்கடிகளுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். தொடர்மாடிக் குடியிருப்பு என்று பெயரிருந்தாலும், லயன் வாழ்க்கையை ஞாபக்கப்படுத்தும் வகையில் இரண்டு வீடுகளுக்கு ஒரு சுவரே தடுப்பாக உள்ளது.

மலசலகூட கழிவுகள் நிரம்பி வழிகின்றன
சுமார் 50 தடவைகளுக்கு மேல் இவ்வீடுகளிலுள்ள மலசலகூடங்கள் நிரம்பியிருக்கும். சமையலறைக்கு அருகிலேயே மலசலகூடங்கள் கட்டிகொடுக்கப்பட்டிருப்பதால் அது இம்மக்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.
மலசலகூடங்கள் நிறைந்துவிட்டால் அதன் கழிவுகள் நிரம்பி சமயலறைக்கே வருகின்றன. வேறு இடங்களுக்குச் செல்ல வழியின்றி அம்மக்கள், அந்த கொடுமைகளுக்கு மத்தியிலேயே சமையலறையில் சமைத்து உண்கின்றனர். கழிவுகளில் மொய்க்கும் இளையான்கள் உணவுப் பண்டங்களிலும் மொய்ப்பதால், இம்மக்கள் நோய்வாய்ப்படும் நிலையும் ஏற்படுகின்றது. அத்துடன், குடலைப் பிய்க்கும் வகையில் வீடுகள் முழுதும் துர்நாற்றமும் வீசுகின்றது. இவை அனைத்தையும் சகித்துக்கொண்டே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் கழிவுகள் சென்றடைவதற்கான இடமொன்று தோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியும் முறையான பராமரிப்பின்றி டெங்கு நுளம்பு பெருகும் வகையிலே காணப்படுகின்றது. அக்கழிவுக் குழியானது, அடிக்கடி நிறைந்து விடுவதால் வீடுகளிலுள்ள மலசலகூடங்கள் 15 நாட்களுக்கு ஒரு தடவை நிரம்பி விடுகின்றன.

தோட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டு தோட்ட நிர்வாகம் இதற்கென நிதியை ஒதுக்கீடு செய்தாலும் அந்நிதியானது உரியவர்களுக்கு முறையாக சென்றடையாததால் தோட்டத்திலுள்ள நகரசபை சுத்திகரிப்பாளர்கள் கழிவுகளை அகற்றுவதில் அக்கறை செலுத்துவதில்லை.
இத்தோட்டத்தின் N மற்றும் டு புளொக் பிரிவிலுள்ள 11 வீடுகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் மலசலகூடங்கள் நிரம்பி வழிந்த நிலையிலே காணப்பட்டன. இதனால் பாதிப்படைந்த அம்மக்கள், மூன்று தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தலைவர்களிடம் சென்று கூறிய போதிலும் தோட்டத் தலைவர்கள் அதனை கவனத்திற்கொள்ளவில்லை. தோட்டத்துக்குரிய வைத்திய அதிகாரியும் இம்மக்களின் பிரச்சினையை கவனத்தில் எடுத்துச் செயற்பட்டதாக தெரியவில்லை.
தமது சுகாதார நலனில் ஒருவரும் அக்கறைகொள்ளவில்லை என்பதை கருத்திற்கொண்ட இம்மக்கள், கடந்த 16ஆம் திகதியன்று, லிந்துலை பொதுச்சுகாதார பரிசோதகரை அணுகி தமது பிரச்சினையைத் தெரியப்படுத்தினர். இதற்கமைவாக லிந்துலை பொதுச்சுகாதார பரிசோதகரான ஸ்ரீகாந்த், உடனடியாக தோட்டத்துக்கு விரைந்து, வீடுகளில் நிரம்பியிருந்த மலசலகூடக் கழிவுகளைப் பார்வையிட்டதுடன், உடனடி நடவடிக்கையாக நகரசபை சுத்திகரிப்பாளரை அழைத்து கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் பணித்துச் சென்றார். இதற்கமைவாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது சொந்தப் பணத்தை வழங்கி மலசலகூட கழிவுகளை அகற்றியுள்ளனர்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வெகு விரைவில் பெற்றுத்தருவதாகவும் இப்பிரச்சினையை பிரதேச சபைக்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறிச்சென்றுள்ளார். மேற்படி பிரிவில் ஆறுமாதக் குழந்தை முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுமார் 20 பேர் வசித்து வருவதுடன் 15இற்கும் மேற்பட்ட வயோதிபர்களும் வாழ்ந்;து வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

வடிகான் நிரம்பி வழிகிறது
இத்தோட்டத்தின் N புளொக் பிரிவிலுள்ள வடிகானும் நிரம்பி வழிகின்றது. தோட்டத்தின் பொது வீதியிலுள்ள மண்ணானது வெள்ளநீரோடு அடித்துவந்து இவ்வடிகானில் தேங்கிவிடுகின்றது. மண் நிரம்பிவிட்டால் மழைக் காலத்தில் மழைநீர் செல்ல வழியில்லாமல் வடிகான் நிரம்பி, அதிலுள்ள நீர், வீடுகளுக்குள் சென்றுவிடுகின்றது. மழைக் காலங்களில் இப்பிரிவு மக்கள், தும்புத்தடியும் கையுமாக வீடுகளுக்குள் புகும் நீரை வெளியில் தள்ளுவதையே தமது வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
சில வீடுகளின் உரிமையாளர்கள், வடிகானை பலகை மற்றும் கற்களைக் கொண்டு மறைத்திருப்பதால் வெள்ளநீரானது செல்வதற்கு வழியின்றி வீடுகளுக்குள் புகுகின்றது. இதற்கு தோட்ட நிர்வாகமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில வீடுகளின் மலசலகூட கழிவுகள், இவ்வடிகானில் விடப்படுவதால் மழைக் காலத்தில் கழிவுநீரோடு சேர்ந்ததாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுகின்றது. இது எத்தகைய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பதை சொல்லித் தெரியவேண்டிய தேவையில்லை.

குடிநீர்ப் பிரச்சினை
இப்பகுதியில் மற்றுமொரு பாரிய பிரச்சினையாக குடிநீர்ப் பிரச்சினை காணப்படுகின்றது. குடிநீரை பெற்றுகொள்வதற்கான வசதிகள் அதிகமாக காணப்பட்டபோதிலும், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட சுமர் 250 குடும்பங்கள், குடிநீரைப் பெற்றுகொள்வதில் பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.
இத்தோட்டத்தில் சுமார் 10 குடும்பங்கள் தமது சொந்த பணத்தைச் செலவு செய்து குடிநீரை பெற்றுகொண்டுள்ளனர். ஆனால், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பலர், குடிநீரைப் பெற்றுகொள்வதற்காக கீலோமீற்றர் கணக்காக நடந்துச்சென்று, நிறைகூடிய பாத்திரங்களில் நீரை நிரப்பி அதனை சுமந்து வரும் நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக பெண்களே இத்தகைய நிறைகூடிய பாத்திரங்களை சுமந்து வருகின்றனர். அதிக நிறையை சுமப்பதால் எதிர்கொள்ள வேண்டிய பின்விளைவுகளை இவர்கள் கருத்திற்கொள்வதில்லை. தமது தாகத்தைத் தீர்க்க அதிக சுமையையும் சுமக்கும் நிர்ப்பந்தத்துக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இப்பகுதி மக்களுக்கு குடிநீரைப் பெற்றுகொடுத்ததாக தெரியவருகிறது. இதன்போது அம்மக்கள் எவ்வித தடையுமின்றி இக்குடிநீரை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்குடிநீரும் தமக்கு கிடைப்பதில்லை என அம்மக்கள் அங்கலாயக்கின்றனர்.
இத்தோட்ட மக்கள் குடிநீரை எவ்விதத் தடையுமின்றி பெற்றுகொள்ள வேண்டும் எனக் கூறி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சானது இத்தோட்டத்துக்கு குடிநீர் வசதியை பெற்றுகொடுப்பதற்காக ஒரு தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்நிதியினூடாக, சுமார் 25 குடும்பங்களே குடிநீர் வசதியைப் பெற்றுகொண்டுள்ளனர். ஏனைய குடும்பங்கள், குடிநீர்த் தட்டுப்பாட்டை தினம் தினம் எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர்.
'எமது தலைவர்களே எமது பிரச்சினையை தீர்ப்பார்கள்' என மாதாந்தம் சந்தாப்பணத்தை தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் இம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்கவாதிகள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படும் 9 தலைமைகளும் கரிசனை காட்டுவார்களா?
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026