Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் நுவரெலியாக் கிளைக்கு நிரந்தர கட்டடமொன்றை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரியுள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் கற்கை நிலையம், ஹட்டன் நகரில் 2002ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றபோதும் இக்கற்கை நிலையமானது நிரந்தர கட்டடமின்றி பாடசாலைகளிலும் வாடகை நிலையங்களிலுமே இயங்கிவருகின்றது.
ஏற்கனவே, இதற்கான கட்டடமொன்றை அமைக்க ஹட்டன் நகரில் உரிய காணி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அங்கு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 300க்கும் அதிகமான மாணவர்கள் கற்கும் இந்த கற்கை நிலையத்துக்கு நிரந்தர கட்டடமொன்றை அமைக்க உயர் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் இதன்போது கோரினார்.
நாடாளுமன்றத்தில், புதன்கிழமை(16) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'எமது மாவட்டத்தில் பாடசாலை மட்டக் கல்வியைப் பெற்றுக்கொடுக்க போதிய பாடசாலைகள் உள்ளன. அதேநேரம் நுவரெலியா மாவட்ட மாணவர்களின் உயர்க்கல்வி தேவைகளுக்கு என அந்த மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்திருக்கவில்லை.
நுவரெலியா மாவட்டத்தைத் தளமாகக்கொண்டு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டியதன் அவசியத்தை மாவட்ட மக்களும் கல்விச் சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றபோதும், அந்த அவா இந்தமுறை வரவு - செலவுத்திட்ட யோசனையிலும் எமக்கு எட்டாக் கனியாகிவிட்டது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தலைநகரை தளமாகக் கொண்டு நாடு முழுவதுமாக 6 பிராந்திய நிலையங்களையும் 18 கற்கை நிலையங்களையும் கொண்டதாக இயங்கி வருகின்றது. அதில் ஹட்டன் கற்கை நிலையமானது தற்போது 11 பாடநெறிகளை நடத்திக்கொண்டிருப்பதுடன் நடப்பாண்டிலே பதிவுசெய்யப்பட்ட 436 மாணவர்களையும் கொண்டதாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கற்கை நிலையத்தில் நிரந்தர கட்டடங்களைக்கொண்ட இரத்தினபுரி, பொலன்னறுவை, காலி, அம்பாறை, புத்தளம், பண்டாரவளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைவிட அதிகளவான மாணவர்கள் நடப்பு ஆண்டிலே பதிவுசெய்து கற்கை நெறிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த ஹட்டன் கற்கை நிலையத்துக்கென பிரத்தியேகமான கட்டடம் இன்மையால், ஆரம்ப காலங்களில் பாடசாலை மண்டபங்களை இரவல் வாங்கி கற்கைநெறிகளை முன்னெடுத்தனர். பின்னர் அது தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
தற்போது ஹட்டன் கத்தோலிக்க கன்னியர் மடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கிக்கொண்டு வருகின்றது. எனவே, ஒரு நிலையான அலுவலகமும்; முகவரி இல்லாமல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கற்கை நிலையம் இயங்கிவருகின்றது.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தை பார்வையிட்டால் ஒவ்வொரு கற்கை நிலையங்களும், பிராந்திய நிலையங்களும் நிரந்தர கட்டடத்தில் நிரந்தர முகவரியில் இயங்கி வருவதை அவதானிக்கலாம். ஆனால், ஹட்டன் நிலையம் நிரந்தர முகவரி இல்லாமல் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய முகவரியுடன் காணப்படுகிறது.
இதற்கான காணி, ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இருந்து 300 மீற்றர் தொலைவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது இலங்கை திறந்த பல்கலைகக்கழகத்திற்கான காணி என உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் உள்ளன. ஆனால், இந்நிலமானது வெளியாரின் அபகரிப்புக்கும் உள்ளாகி வருகின்றமை இன்னுமொரு பிரச்சினையாக உள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உயர்க்கல்வி வாய்ப்புக்களை பெறுவதற்கு சிரமப்பட்டுக்;கொண்டிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி எதிர்கால சந்தததியினரின் சுபீட்சமான வாழ்வுக்காக இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் கற்கை நிலையத்தை ஹட்டன் நகரிலே ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமைத்து தருவதற்கு ஆவனஞ் செய்யவேண்டும்' என தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago