2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர்களே போராட முன்வரவும்

Kogilavani   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிய  ஒரு வருடத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதே தவிர, தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தமது செல்வாக்கை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி,  நாடாளுமன்ற தேர்தல்களில்  1,000 ரூபாய்; நாள் சம்பள விவகாரத்தை
தூக்கிப்பிடித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  வழமைப்போல இன்று தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்துள்ளது' என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'கூட்டு ஏமாற்றுக்காரர்களின் சதித்திட்டங்களை முறியடித்து, 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை வென்றெடுக்கத் தோட்ட தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நம்பிக்கையோடு போராட முன்வர வேண்டும்' என அவர் தோட்டத்  தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

'1,000 ரூபாயை நிச்சயம் வாங்கித்தருவோம் என மார்தட்டிய காங்கிரஸின், மகளிர் தின விழாவில் அதிதியாக கலந்துக்கொண்ட பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க,  'இ.தொ.கா.வுடன் இணைந்து பயணிப்போம்' எனவும் 'அரசாங்கத்தால் 770 ரூபாயை மட்டுமே பெற்றுத்தர முடியும்' என உரை நிகழ்த்தியதற்கும் அதே கூட்டத்தில், ஆறுமுகன் தொண்டமான் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிப்போல் பேசியதற்கும் இடையில், ஒரு கூட்டுச் சதி இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது' என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  

அவ்வறிக்கையில் மேலும் கூறிய அவர், '1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத் தருவோம் என தேர்தல் மேடைகளில் ஆறுமுகன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோ  ஆகியோர் அவரவர் பங்குக்கு கொக்கரித்தனர். அம்மக்களின் வாக்குகளை சுருட்டிக்கொண்டு அமைச்சர், இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி சுகத்தையும் அனுபவித்து வருகின்றனர்.

தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர், தனியார் துறையினருக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்ற 2,500 ரூபாய் கொடுப்பணவு, தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என சபையிலும் ஊடகங்களிலும் சொல்லித்திரிகின்றனர். வரலாற்றில் முதல் தடவையாக அரச திறைசேரியிலிருந்து 2,500 ரூபாய் கொடுப்பணவு தோட்ட தொழிலாளர்களுக்கு  வழங்கப்படவுள்ளதாகவும் இதனைச் சாதித்த பெருமை முற்போக்கு கூட்டணியையே சாரும் என அறிக்கை மழை பொழிந்தாலும் அது, நடைமுறைக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை' என்றார்.

இவ்வகையான சந்தர்ப்பவாத, பிழைப்புவாத கூட்டு ஏமாற்றுக்காரர்களை நிராகரித்து, தொழிலாளர்கள் மாற்று வெகுஜன அரசியல் தளத்தில் போராட முன்வர வேண்டும். மக்கள் சக்திக்கு நிகரான சக்தி வேறெதுவும் இல்லை என்றும் நம்பிக்கையீனங்களை புறந்தள்ளி தொழிலாளர்கள் போராடுகின்றபோது  1,000 ரூபாய் நாள் சம்பளம் நிச்சயம் வென்றெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து பயணிக்கும் எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .