2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

புதிய அரசியலமைப்பில் நன்மை தரும் விடயங்களை உள்ளடக்க வேண்டும்:அந்தோனிமுத்து

Sudharshini   / 2016 ஜனவரி 24 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பான்மை  மக்கள் அனுபவிக்கும் சகலவிதமான உரிமைகளையும் பெருந்தோட்ட மக்களும் அனுபவிக்கும் வகையிலான விடயங்கள், புதிய அரசியலமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என இலங்கை - இந்திய வமசாவளி மக்கள்  முன்னணியின் செயலாளர் நாயகமும் சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவருமான எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

'உள்ளூராட்சிமன்றங்களில் வாக்களிக்கும் இயந்திரமாக பயன்படுத்தப்படும் தோட்டத்தொழிலாளர்கள், இந்த மன்றங்களினால் வழங்கப்படும் எந்தவித பயன்களையும் பெற முடியாதவர்களாகவே கணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அமுலில் உள்ள சட்டமே இதற்கு காரணமாகும்' எனவும் அவர் கூறினார்.

இலங்கை-இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் தலைவர் முத்தப்பன் செட்டியார் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் சமர்ப்;பித்த ஆலோசனைகளை, கொழும்பு விசும்பாயாவிலுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்கான  குழுவின் முன்னிலையில்  வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும் கடந்த 22ஆம் திகதி சமர்;ப்பித்து பேசும்போதே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஆங்கிலேயர்களினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர்களது உழைப்பும் அவர்களது வாக்குகளும் இந்த மண்ணுக்கு உதவி வருகின்றது. ஆனால், இந்த மக்களுக்குரிய  உரிமைகளானது பறிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் உள்ளன' என்றார்.

'இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களுடன் எமது மக்களும் சரிசமமாக வாழவும் உரிமைகளை பெறவும் அரசியல் அமைப்பின் ஊடாக வழிவகை செய்ய வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்காக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள்

 இந்நாட்டில் வாழும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களும் பெரும்பான்மை பிரஜைகளைப்போன்று அனைத்து உரிமைகளையும் சரிசமமாக பெற வேண்டும்.

இந்திய வம்சாவளியினருக்கென தனியான அடையாளம் இனங்காணப்பட்டு அது, அங்கிகரிக்கப்படல் வேண்டும்.

உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்களில் வாக்களிக்கும் இம்மக்களுக்கு, இச்சபைகளின் வேலைத்திட்டங்கள் தற்போதுள்ள சட்டவாக்கின்படி வழங்கப்படுவதில்லை. இதனை நீக்கி அவர்களுக்கும் அரசின் அனைத்து அரசியல்- சமூக- பொருளாதார, சமய-கலை- கலாசார உள்ளிட்ட  அனைத்து -  அபிவிருத்தி வசதி-வாய்ப்புகளும்  கிடைக்கப்பட செய்ய  வேண்டும்.

இந்திய வம்சாவளியினருக்கு அம்மக்களது விகிதாசார அடிப்படையில் அரச தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். அத்துடன், அனைத்து அமைச்சினதும்-அரசாங்க திணைக்களங்களினதும் அதிகார சபைகளிலும்  வழங்கப்படும் இயக்குனர் சபை அங்கத்தவர்கள் நியமனங்களும் வழங்கப்படவேண்டும். வெளிநாடுகளுக்கான இராஜதந்திர நியமனங்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும். எமது இந்த ஐந்து அம்ச ஆலோசனைகள் அனைத்தையும் புதிய அரசியல் அமைப்பின் யாப்பில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்களென நாம் விசுவாசிக்கின்றோம்' என கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .