2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

பிரதமர் மோடியை வரவேற்பதற்கு ‘தனித்து அதிகாரம் வழங்கப்படவில்லை’

Yuganthini   / 2017 மே 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

“ஹட்டனுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் வரவழைக்கின்றனர்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

மேலும், இந்தியப் பிரதமரின் மலையக விஜயம் தொடர்பில் தனிப்பட்டு செயற்படும் அதிகாரம் எந்தவொரு மலையக கட்சிக்கும் அரசாங்கம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஹட்டனில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ இந்தியப் பிரதமரை, நாங்கள் தான் வரவழைக்கின்றோம் என, மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன தோட்ட தொழிலாளர்களுக்கு பொய் கூறி ஹட்டன் பிரதேச தோட்டப்பகுதி மக்களிடத்தில் மோதல்களை ஏற்படுத்துகின்றன.

எனவே,  ஹட்டனுக்கு வருகைதரவுள்ள இந்தியப் பிரதமரின் வருகையை, இவ்விரு கட்சிகளும் தமது பலத்தை நிரூபிக்க அடித்தளமாக பாவிக்கின்றது.  

ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோருடன் இந்திய அரசாங்கம் வைத்துள்ள நட்புறவு காரணமாக, இந்தியப் பிரதமரை இலங்கைக்கு தேசிய நிகழ்வொன்றுக்கு அழைத்ததன் காரணமாக, வருகை தரும் இந்தியப் பிரதமர், மலையகத்துக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதுதான் உண்மையாகும்.

மாறாக, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ அழைத்து இந்தியப் பிரதமர் வருகின்றார் என்று கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. அப்படிகூறிதான்  மலையக மக்களுக்கு போலியான தகவல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

“த.மு.கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் சார்பாக அழைக்கப்பட்டுள்ள நிலையில் நோர்வூட் மைதானத்தில் இடம்பெறும் பொது கூட்டம் தொடர்பில்  நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, இ.தொ.கா தரப்பினர் ஜனாதிபதியின் பக்கம் சார்ந்துள்ளமையால் இந்தியப் பிரதமர் வருகையிலான நடவடிக்கையில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால், தனிப்பட்ட ரீதியில் எவரும் எந்தத் தனிக் கட்சியும் செயற்பட அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .