2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பொலிஸாரால் தாக்கப்பட்டவர்களுக்கு பிணை

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, ஆர்.ரமேஷ்

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு நபர்களுக்கு நுவரெலியா பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தே வத்தவின் பணிப்பின்பேரில் பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

 'கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தின் ஓரத்தில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் மீது சந்தேகம்கொண்ட, இரவு நேர ரோந்து சேவையில் ஈடுப்பட்டிருந்த தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.வணிகதுங்க விசாரணை செய்துள்ளார்.

இவ் விசாரணையின் போது வாய்தர்க்கம் ஏற்பட்டதுடன் பொலிஸாரால் இந்நபர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட நபரை பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை காலையில் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற உறவினர் ஒருவரையும் பொறுப்பதிகாரி தாக்கியதுடன் அவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக தாக்குதலுக்குள்ளான  நபர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் வேறு சிலருடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தலவாக்கலை நகரில் நேற்று காலை முதல் பகல் 03.00 மணி வரை பதற்ற நிலை காணப்பட்டதுடன் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் இருவரும் பொலிஸாரின் ஊடாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து,  சிகிச்சைப்பெற்ற இருவரும் வைத்தியசாலையில் இருந்து மாலையில் வெளியேறி பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அதனையடுத்து, தகவல் அறிந்த நுவரெலியா பிராந்திய பிரதி பொலிஸ் அத்தியட்சகர், தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு வந்ததுடன் பொலிஸார் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அதனையடுத்து, குறித்த நபர்கள் இருவருக்கும் பொலிஸ் பிணை வழங்குவதாகவும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .