2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

புஸ்ஸல்லாவையில்  பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன், மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள மலையக ஆய்வு மையம், குறித்த மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை தமது அமைப்பின் பேராட்டமும் கண்காணிப்பும் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி அமைப்பின் செயலாளர் அருட்தந்தை மா. சத்திவேல் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைக்கப்பட்டிருந்த இளைஞன் நடராஜா ரவிச்சந்திரனின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

பொலிஸின் 150ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இந்த மரணம்? நல்லாட்சி அரசை உருவாக்க பாடுப்பட்ட மக்களை, அரசாங்கம் இவ்வாறுதான் கவனிக்குமா? ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றுகின்றபோது, நாட்டில் நடக்கும் இத்தகைய அநீதிகளுக்கு யார் பொறுப்பேற்கப்போகின்றார்கள்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குறித்த இளைஞனின் மரணத்துக்கு கூறும் பதில் என்ன?' என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

'இந்த மரணத்துக்கு மலையக அரசியல் தலைவர்கள் நீதியைப்பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை. அவர்கள் அரசின் விசுவாசிகளாக  அமைதி காக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் வாய்த்திறக்காதவர்களா அரசாங்கத்திடமிருந்து நீதியைப்பெற்றுக் கொடுக்க போகின்றார்கள்?

மலையக சமூக ஆய்வு மையம், நடராஜா ரவிச்சந்திரனின் மரணத்துக்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு குறித்த இளைஞனின் குடும்பத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் பாதூகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கோருகின்றது.

ஜனநாயக நாட்டில் நடக்கும் காட்டு நீதியை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. மக்களை பாதுகாக்கவேண்டிய பொலிஸ், தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் தூக்கிட்டு சாகும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிருந்ததா? இதுதான் பாதுகாப்பா? பொலிஸாரால் தனது அண்ணன் தாக்கப்பட்டதாக கூறும் தம்பியின் கதறல், மரணம் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

சிவில் அமைப்பாகவும் மலையக சமூக ஆய்வு மையம் என்ற அடிப்படையிலும் இளைஞனின் மரணத்துக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓய்ந்துவிடப்போவதில்லை. போராட்டமும் கண்காணிப்புக்களும் தொடரும்' என குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .