Editorial / 2020 மே 26 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன்
தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களின் பங்குதாரர்கள் என்பதை மறந்து தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதாலேயே தோட்டங்களில் அத்துமீறல்களும், அழுத்தங்களும் அதிகரித்து காணப்படுவதாக முன்னாள் பிரதி கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான மு. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (26) விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட தோட்டங்களில் இன்று வெளியாரின் அத்துமீறல்கள், காணி சுவீகரிப்பு என்பன தொடர்ந்து இடம்பெறுகின்றன என்றும் தரிசு நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில், கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எனினும் இவற்றை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகள் தற்காலிகமாகவே உள்ளன என்றும் அவர் கூறினார்.
அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்ட தோட்டங்கள், தனியார் கம்பனிகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நாளில் இருந்து தோட்ட நிர்வாகமும் தேயிலை உற்பத்தியும் நலிவடைந்துள்ளன என்று தெரிவித்த அவர், தொழிலாளர் குறைப்பு, காணி சுவீகரிப்பு என்பன இடம்பெற்று வருகின்றது என்றும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்கு பத்திரங்கள் வழங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டங்கள் இலாபத்தில் இயங்கும் போது வரும் வருமானத்தை, தொழிலாளர்களும் பங்கிட்டு கொள்ளும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டிருந்தது என்றும் எனினும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பங்கு பத்திரங்கள், இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் தொழிற்சங்கங்களின் செயற்பாடு இன்று திருப்தியளிப்பதாக இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் நலனை மாத்திரம் முன்னிறுத்தி தொழிற்சங்கங்கள் செயற்படுவதால், தொழிலாளர் நலன் கேள்விக்குள்ளாகியுள்ளது என்றும் இதன் காரணமாக நிர்வாகங்கள் தொழிலாளர்களிடம் சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கின்றன என்றும் கூறினார்.
கம்பனிகளும் குத்தகையாளர் என்பதை மறந்து உரிமையாளரைப் போன்று காணி, நிலங்களை விட்டுக்கொடுத்து வருகின்றன என்றும் இந்நிலமையின் பாரதூரம் உணர்ந்து, மலையக தலைமைகள் தொழிலாளர் நலனில் அக்கறை எடுத்து தரிசு நிலங்களை எம்மவருக்கே பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026