2025 மே 19, திங்கட்கிழமை

பூர்த்தி செய்யப்படாத வீடமைப்புத் திட்டம்; பயனாளிகள் சிரமம்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மஹேஸ் கீர்த்திரத்ன

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக 'செமட்ட செவன' தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டம் மூலம் மாத்தளை- உல்பத்த ஆட்டிஸ்மலை வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையால் பயனாளிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 25 வீடுகள் அமைக்கப்பட்டு அது பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டத்தில் 23 வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் குறித்த 23 வீடுகளுக்கான 90 சதவீத பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

ஆட்சி மாற்றம் , இந்த வீடமைப்பு திட்டத்திற்கான நிதி பற்றாக்குறையே இத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டமைக்கான காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் குறித்த வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள யன்னல், கதவுகள், மின்மானி, உள்ளிட்ட சில பொருள்களும் திருட்டுப்போவதுடன், இரவு நேரங்களில் பூர்த்தி செய்யப்படாத வீடுகளில் சட்டவிரோத செயற்பாடுகளும் இடம்பெறுவதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய வீடுமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய முழு கடன் திட்டத்தின் மாதாந்த அறவீடு அறவிடப்பட்டு வரும்  நிலையில், முழு கடன் திட்டத்தில் சொற்ப பணமே தமக்கு கிடைத்துள்ளதென்றும் தெரிவிக்கின்றனர்.

எனவே எப்படியாவது தமது சொந்த நிதியைப் பயன்படுத்தியாவது வீட்டுப் பணிகளை பூர்த்தி செய்ய தயாராக இருப்பதாகவும் எனவே முழு கடன் திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய நிதியை செலுத்துமாறும் பயனாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த வீட்டு திட்டத்தை ஆரம்பிக்க முன்னின்று செயற்பட்ட மாத்தளை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் காமினி கொஸ்தாவிடம் இது தொடர்பில் வினவியபோது,

மாத்தளை பிரதேச சபைக்குரிய ஆட்டிஸ்மலை வீடமைப்பு திட்டத்தில் 150 வீடுகளுக்கு மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் அந்த வீடுகள் அமைக்கப்பட்டு, தற்போது அங்கு மக்கள் வசிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் இரண்டாம் கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 23 வீடுகளுக்கான பணிகள் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ளன.

எனவே புதிய அரசாங்கமாவது, இந்த மக்களுக்கு வழங்க வேண்டிய கடன் உதவியை வழங்கினால், அவர்கள் வீடுகளை அமைத்து குடியேறுவார்கள் என தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X