2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

முன்பள்ளிகளை முறையாக செயற்படுத்த விபரங்கள் திரட்டப்படுகின்றன

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் இயங்கி வரும் முன்பள்ளிகளை முறையாக செயற்படுத்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதேநேரம், இங்கு கடமையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய வேதனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா பிரதேசத்தில் கடமையாற்றும் முன்பள்ளி ஆசியர்களுக்கு சுகாதார பொருளாதார சமூகக் கல்லூரியின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட சுகாதார மேம்பாட்டாளர் பி.ஏ. பாஸ்கரன் தலைமையில் ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

ஆரம்பக் கல்விக்கு அத்திவாரம் இடுவது முன்பள்ளிக் கல்வியாகும். இதில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பணி அர்ப்பணிப்பு நிறைந்ததாகும். மூன்று வயது நிரம்பிய சிறுவர்கள் முன்பள்ளிக் கல்விக்கு வரும்போது மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும் சுட்டித்தனம் வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் செய்கின்ற குழப்படிகள் அனைத்தையும் பொறுத்தக் கொண்டும் சகித்துக் கொண்டும் அவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும் ஆரம்பக் கல்வியையும் போதித்து அரசாங்க பாடசாலைகளுக்கு செல்லக் கூடிய தகுதி வாய்ந்தவர்களாக உருவாக்குகின்ற பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

அவர்கள் பயிற்சி பெறவும் டிப்ளோமா சான்றிதழ் பெறவும் வழிகாட்டி ஊக்குவித்த சுகாதார மேம்பாட்டாளர் பாஸ்கரனின் பணி பாராட்டத் தக்கதாகும். ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதன் மூலம் முறையான கற்பித்தலுக்கு தம்மை தயார்ப் படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இன்று சான்றிதழ் பெற்றவர்கள் தமது மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து எதிர்காலத்தில் பல திறமைசாலிகளை உருவாக்க வேண்டும்.

மலையகத்தில் முன்பள்ளிக் கல்வி வசதி குறைவாக உள்ள காரணத்தால் எமது சங்கத்தின் தலைவர், அமைச்சர் திகாம்பரம் இதுவரை 15க்கும் மேற்பட்ட முன்பள்ளிகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.  அதில் சேர்ந்து சேவையாற்றக் கூடிய  வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியும். எம்மோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளிகளில் அதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

மத்திய மாகாணத்தில் முன்பள்ளிகளை முறையாக இயங்கச் செய்வதற்காக விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தேவையான விபரங்களை கொடுத்து உதவுவதில் அக்கறை காட்ட வேண்டும். அதேபோல்இ மத்திய மாகாணத்தில் கடமையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய வேதனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முன்பள்ளிகளை நடத்துவதற்கு அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தான் தேவையானதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல் எல்லோரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். அத்தோடு கல்வி கற்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்பள்ளிக் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .