2025 மே 19, திங்கட்கிழமை

மண்ணையும் பெண்ணையும் கண்கள்போல பாதுகாக்க வேண்டும்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

" நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

 எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இதன் ஓர் அங்கமாகவே பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

பார்கேபல் தோட்டம், ஹையிட்ரி தோட்டம் என்பவற்றில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

சமூகமாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் வறுமை என்பது பெரும் தடையாக உள்ளது.  எனவே, மலையக பெருந்தோட்டப்பகுதியில் இருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான திட்டங்களை நாம் வகுத்து வருகின்றோம்.  

 

இந்நிலையில் இந்த வறுமை நிலைமையை பயன்படுத்தி எமது பெண்களை வீட்டு வேலைக்கு அழைத்துச்செல்ல சில தரகர்கள் தீவிரமாக செயற்படுகின்றனர். சிலர் சட்டவிரோதமாக சிறார்களையும் கொண்டு செல்கின்றனர். தொழில் பாதுகாப்பு உட்பட எந்தவொரு உத்தரவாதமும் இன்றி, அற்ப பணத்துக்காக அவர்கள் எம்மவர்களை விற்பனை செய்கின்றனர். ஹிஷாலினியை இழந்தோம். இன்று ரமணியை இழந்துள்ளோம். ஊடகங்களில் வெளிவராத பல சம்பவங்களும் உள்ளன.

இந்நிலைமை தொடரக்கூடாது. அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். பெண்களின் பொருளாதாரத்தை பலப்படுத்த சுயதொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இதற்கான உதவிகள் வழங்கப்படும். அதேபோல பெண்களின் சுகாதார பாதுகாப்பும் முக்கியம். அதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டுவருகின்றன.

நாடோ, வீடு பெண்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால்தான் எல்லா விடயங்களும் நன்றாக நடைபெறும். " - என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X