2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாண சபை அமர்வின்போது செங்கோலுடன் ராஜபக்ஷ ஓட்டம்

Kogilavani   / 2016 ஜூன் 22 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி, மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண சபை அமர்வின்போது சபையின் உறுப்பினர் கு.ராஜபக்ஷ, செங்கோலுடன் வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சபைத் தலைவர் எல்.டி.நிமலசிறி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், சபை அமர்வை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மத்திய மாகாண சபை அமர்வு, சபைத் தலைவர் எல்.டி.நிமலசிறி தலைமையில் நேற்று (21) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நடைபெற்றுக்கொண்டிருந்தது.

மாகாண அமைச்சர்களுக்கு பதிலுரை ஆற்றுவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது, மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலகே, கண்டி சுகாதார அமைச்சின் காரியாலத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற கூட்டம் தனது அனுமதியின்றி நடத்தப்பட்டதாகவும் இதனை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றி அவர், 'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின்; பங்களிப்புடன்  திங்கட்கிழமை (20), மத்திய மாகாண சுகாதார அமைச்சில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய  மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் சாந்தி சமரசிங்க மற்றும் மத்திய மாகாணத்துக்குட்பட்ட வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்' என்றார்.

'இக்கூட்டத்தில் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வதற்காக, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின்கீழ், கட்டுகஸ்தோட்டை, அக்குறணை, தெல்தெனிய மற்றும் தெல்தோட்டை, தம்புளை மற்றும் ரிகில்லகஸ்கட ஆதார வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார அமைச்சர் என்ற முறையில் எனக்கு இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன் மாகாணத்தின் சுகாதார துறைகள் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. இச்சம்பவமானது, மத்திய அரசானது மாகாண சபைகளின் விடயங்களில் தன்னிச்சையாக தலையிடுவதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இவ்விடயத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்' எனக் கூறினார்.

இவ்விடயத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர்களும் வன்மையாக கண்டித்ததுடன் மாகாண சுகாதார அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சபை அமர்வை ஒத்திவைக்க வேண்டுமென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோரினர். சிலர் சபை அமர்வை விட்டு வெளியேறினர்.

இதன்போது, எழுந்த  மாகாணசபை உறுப்பினர் கு.ராஜபக்ஷ, செங்கோலை தூக்கிக்கொண்டு பின்புறமாக ஓட முற்பட்டார். இதனை அவதானித்த சபை ஊழியர்கள், அவரை வழிமறித்ததுடன் அவரிடமிருந்து செங்கோலை பிடுங்கி இருந்த இடத்தில் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சபை அமர்வை 10 நிமிடத்துக்கு ஒத்திவைக்குமாறு ஆளுங்கட்சி சபாநாயகர் மதியுகராஜா கோரினார். அவர் கோரியதற்கமைய, மாகாணசபை தலைவர், சபை அமர்வை 10.30 இலிருந்து 10.40 வரை ஒத்திவைத்தார்.

இதன்போது கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் வெளியேறியதுடன் சபைக்கு வெளியில் உள்ள இடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றினர். ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சுகாதர, விளையாட்டு, போக்குவரத்து அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர் ரேணுகா ஹேரத்தும் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் தன்னிச்சையாக நடைபெற்ற கூட்டத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் மத்திய அரசு தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்வங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் இதன்போது கோரினர்.

இவ்விடயத்தை முதலமைச்சருக்கூடாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லவுள்ளதாகவும் முதலமைச்சர் நேற்று சபைக்கு சமூகமளிக்காததல் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாகவும் கூறினர்.

ஊடகவியலாளர் சந்திப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, அருகிலிருந்த ஆளுநர் காரியாலயத்துக்கு சென்ற உறுப்பினர்கள், இவ்விடயத்தை ஆளநர் டிலுக்கா ஏக்கநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதற்கு பதிலளித்த ஆளுநர், இவ்விடயத்தை வன்மையாக கண்டித்ததுடன் மேற்படி கூட்டத்தை ஒழுங்கு செய்த பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்விடயத்தை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்று இனிவரும் காலங்களில் மத்திய அரசினால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து சபை அமர்வு மீண்டும் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .