2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

முதல் மெழுகுசிலை அருங்காட்சியகமாக , எஹலெபொல மாளிகை

Janu   / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க எஹலெபொல மாளிகை இந்நாட்டின் முதல் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் ஆகும்.  நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்பட்ட எஹலேபொல மாளிகையை  தலதா மாளிகையிடம் ஒப்படைத்ததன் பின்னர் தொல்பொருள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து இந்த மெழுகுசிலை அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க  தேல பண்டார தெரிவித்தார் .

எஹலேபொல மாளிகையைச் சேர்ந்த கண்டி யுகத்தின் கட்டிடக்கலை, சடங்கு கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தொழில்கள் மற்றும் கலைகள் ஆகியவை மாளிகையில் உள்ள மெழுகு உருவங்களின் உதவியுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், தேசிய மாவீரர்களான மொனரவில கெப்பெட்டிபொலதிசாவ, எஹலேபொல மகாதிகாரம், தேவேந்திர மூலாச்சாரி மற்றும் எஹலேபொல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களின் உயிருள்ள மெழுகுச்  சிலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் அழகையும் பெருமையையும் பறைசாற்றும் இந்த மெழுகு அருங்காட்சியகம் உள்நாட்டினரினதும் வெளிநாட்டினரினதும் கவனத்தையும் ஈர்க்கும் என நம்புவதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலபண்டார கூறினார்.

கண்டி யுகத்திற்குரிய எஹலேபொல மாளிகை கி.பி.  1800 க்கும் 1810 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில்  நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. அது எஹலேபொல நிலமேக்கு சொந்தமாக இருந்ததாகும்.  இந்நாட்டின் வரலாற்றிலே மிகவும் கவலையான கதாபாத்திரம் ஒன்றாகக் கருதப்படுகின்ற  எஹலேபொல குமாரிஹாமி மற்றும் வீரமத்தும பண்டார குமரு ஆகியோர் வாழ்ந்தது இந்த மாளிகையில் தான். ஆங்கிலேயர்கள்  1818 ஆம் ஆண்டு கண்டி ராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர்,  எஹலேபொல மாளிகை ஒரு  சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கு அவர்கள்  மாளிகையின் அசல்  வடிவத்தை சேதப்படுத்தி புதிய சிறைச்சாலைத் தொகுதி ஒன்றையும்  கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மலை நாட்டை ஒற்றுமைபடுத்துவதற்காக வேண்டு  நடந்த  விடுதலைப் போராட்டங்களை இயக்கிய   மொனரவில கப்பட்டிபொல,  அஹலேபொல நிலமே உட்பட  50 க்கும் மேற்பட்ட தேசிய வீரர்களை ஆங்கிலேயர்கள் இங்கு சிறைப்படுத்தி வைத்திருந்தனர்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பழமையான 141 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் அமைந்துள்ள எஹலேபொல மாளிகை 2013 ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டதுடன் அதை  அதிகாரசபை மீண்டும் அபிவிருத்தி செய்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் இந்த புனரமைப்புக்கள் தொடர்பில் தனது கருத்தைத் தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க,150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த மீள் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக  குறிப்பிட்டார். தொல்பொருளியல்  திணைக்களம் மற்றும் மத்திய கலாச்சார நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த மீள் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு இலங்கை இராணுவமும் கடற்படையும் பங்களிப்புகளை வழங்கியதாக ஏகநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, எஹலேபொல மாளிகையை ஸ்ரீ தலதா மாளிகைக்கு கையளிப்பது தொடர்பான உரிமைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். அதை விரைந்து தயாரிக்க அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாளிகையை தலதா மாளிகையிடம் ஒப்படைப்பதற்கான  அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையிலும் சமர்ப்பித்திருக்கிறார்.

முனீரா அபூபக்கர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X