Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
கண்டி, லிட்டில்வெளி தோட்ட மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுகொடுக்கவுள்ளதாகவும் இவர்களுக்குரிய காணிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
'கண்டி மாவட்டத்தின் தெல்தோட்ட பிரதேச செயலக பிரிவுக்கான மாதாந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம், தெல்தோட்ட பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (2) இடம்பெற்றது. இதன்போது கடந்த காலங்களில் மிகுந்த பாரபட்சத்துக்கு உட்பட்டிருந்த லிட்டில்வெளி தோட்டத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக காணி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது' என்றார்.
'தெல்தோட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகமான அரச காணிகள் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. இவற்றில் மக்கள் பெருந்தோட்ட சபைக்கு உரித்தான தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள காணிகளும் உள்ளடங்குகின்றன.
கடந்த காலங்களில் பல்வேறு அரச நிறுவனங்களின் தேவைகளுக்காக இக்காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சில அரசியல்வாதிகளின் தலையீட்டினால்; வியாபாரிகளுக்கும் மத தலைவர்களுக்கும் தோட்டங்கள், நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வெளி பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சந்தர்ப்பங்;களில் பூர்வீகமாக மேற்படி தோட்டங்களில் வாழ்ந்த மக்கள், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களை லயன் அறைகளுக்குள்ளேயே முடக்கி வைக்கும் நடவடிக்கையே இடம்பெற்றுள்ளது.
இதன்போதெல்லாம் கடந்த கால அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மௌனம் சாதித்தனர். ஆனால், நாங்கள் இத்தகைய நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் களத்துக்குச் சென்று மக்களோடு மக்களாக இணைந்து பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தோம்.
இதன்போது அமைச்சர் பழனி திகாம்பரமும் நேரடியாக எமது செயற்பாட்டுக்கு வலு சேர்த்தார். இதன்மூலம் இன்று, லிட்டில்வெளி தோட்டத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி பெற்றுகொடுப்பதற்;கான தீர்மானம் எட்டப்பட்டது' என்றும் அவர் கூறினார்.
'தோட்ட மக்களுக்கான காணி வழங்குதல் முடிவடையும் வரை வெளியார் எவருக்கும் காணி வழங்குதல் மேற்கொள்ள கூடாதென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தற்போது வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு காணி வழங்குவதென்றும் இரண்டாம் கட்டமாக தோட்ட மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு காணி வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த இன்னுமொரு மாபெரும் வெற்றியாகும். இத்தீர்மானத்துக்கு அமைவாக கண்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கான காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில், இதனை முதன்மையான நடவடிக்கை எனக்கொண்டு செயற்பட தீர்மானித்துள்ளேன். இந்த முயற்சிக்கு அரசியல், தொழிற்சங்க பேதங்களை மறந்து தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுகொள்கின்றேன்' என அவர் கோரியுள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .