2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மக்கள் பணிகளை கழிவு எண்ணெய் வீசி தடுக்க முடியாது: வலி.வடக்கு பிரதேசசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான புதிய கட்டிடம் மீது கழிவு எண்ணெய்  வீசி சேதப்படுத்திய சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக வலி.வடக்கு பிரதேச சபையின் எதிக்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
 
புதிய கட்டிடத்தில் புதியதொரு சூழலில் பிரதேச சபை அலுவலகம் இயங்குவதை விரும்பாத தீயசக்திகளின் திட்டமிட்ட அநாகரீக செயலே இது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இப்பிரதேச சபையின் சிறப்பான செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் இப்புதிய கட்டிடத்தை நிர்மாணிக்கவென 6.8 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்து நேர்த்தியான முறையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு பணிகளையும் ஆரம்பிக்கவிருந்த நிலையில் இக்கழிவு ஓயில் வீச்சுச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இதுபோன்றதொரு கழிவு ஓயில் வீச்சுச் சம்பவம் கடந்த 2002ஆம் ஆண்டில் எமது கட்சியின் சார்பில் தெரிவான கரவெட்டிப் பிரதேச சபை அலுவலகம் மீதும் நடைபெற்றிருக்கிறது. அதே ஆண்டில் தெல்லிப்பளை, குட்டியப்புலம் தபால் அலுவலகத்தின் மீதும் விடுதலையின் பெயரால் இவ்வாறானதொரு கழிவு ஒயில் வீச்சு இடம்பெற்றிருக்கிறது.

அதன்பின்னர் பல நெருக்கடிகளின் மத்தியில் யாழ்.மாநகரசபை உறுப்பினர்களுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பிரதி முதல்வர் செல்லன் கந்தையா தலைமையில் யாழ். பொதுநூலகத்தைப் புனரமைத்து மக்கள் பணிக்காக திறக்க முற்பட்ட சமயம், அம்முயற்சிகளை முடக்கும் வகையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையும் எமது மக்கள் நன்கறிவர்.

நீண்டகால அழிவு யுத்தத்தை நாட்டு மக்கள் அனைவருமே பெரும் விலைகொடுத்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த இயல்பான அமைதிச் சூழல் தொடர்வதை விரும்பாத சில தீயசக்திகளின் கோழைத்தனமான செயலாகவே இக்கழிவு ஓயில் வீச்சுச் சம்பவத்தையும் நாம் கருதுகிறோம்.

மக்கள் அமைதியான சூழலில் வாழ்கின்ற போதும் தமிழ் மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளிவிடப்பட்டுள்ளதாகப் பிரசாரம் செய்து தம் அரசியல் வாழ்வை நகர்த்த விரும்புவோருக்கு இவ்வாறான பிரதேச சபை அலுவலகங்கள் புதிய கட்டிடத்தில் புதுப் பொலிவுடன் பணிகளை ஆரம்பிப்பது பெரும் ஆற்றாமையை ஏற்படுத்தும் என்பதை மக்கள் அனைவருமே புரிந்து கொள்வார்கள்.

இனத்தின் பெயரால் ஏமாற்று அரசியல் நடத்துபவர்கள் இப்போதும் புலிப்பூச்சாண்டிகளைக் கிளப்பி தமது அதிகார கதிரைகளைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணுவார்களாயின், அது வெறும் பகற்கனவாகவே இருக்கும். இடம்பெற்ற இந்தக் கழிவு ஓயில் வீச்சுச் சம்பவத்தின் சூத்திரதாரிகளை விரைந்து கண்டுபிடிக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு எமது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராது இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேச சபைகளின் சீரான செயற்பாட்டிற்கு உதவ வேண்டும் என தாம் கோருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X