2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நெடுந்தீவிற்கு எந்தக் கட்சியும் சென்று வரலாம்; ஈ.பி.டி.பி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தேர்தல் பிரசாரத்திற்காக நெடுந்தீவிற்கு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது அச்சுறுத்தல் விடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவதூறுகளை தொடர்ந்து எம்மீது பரப்பி வருகின்றனர்.  ஆனாலும் இவ்வாறான ஜனநாயக விரோத செயல்களில் நாம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லையென்றும் எவருக்கும் எங்கும் தமது கருத்துக்களை சொல்வதற்கு சுதந்திரமுண்டு நெடுந்தீவுக்கும் யாரும் சென்று வரலாம் என்று நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் தானியேல் றெக்சியன் (ரஜீவ்) தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

பல்வேறு அரசியல் கட்சிகளாலும் கைவிடப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேசத்தில் ஈ.பி.டி.பியினராகிய நாம் மட்டும் தங்கியிருந்து அந்த மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். கடல் தாண்டி வந்து நெடுந்தீவு மக்கள் மத்தியில் நின்று அந்த மக்களுக்கு பணியாற்றுவதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ளுவதற்கு முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது தவறுகளை நியாயப்படுத்துவதற்காகவே ஈ.பி.டி.பியினராகிய எம்மீது தொடர்ந்தும் அபாண்டமான அவதூறுகளை பரப்பி வருகின்றது.

இதன்மூலம் தமது இயலாத்தன்மையை நியாயப்படுத்தும் வகையில் மலினமானமுறையில் தமது சுயலாப அரசியல் பிரசாரத்தை வழமைபோல் முன்னெடுத்து வருகின்றனர்.  

தேர்தல் காலத்தில் ஒரிரு நாட்கள் மட்டும் நெடுந்தீவை எட்டிப் பார்ப்பவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவர்களின் மாகாணசபை வேட்பாளர் கனகரத்தினம் விந்தன் சில நாட்களுக்கு முன்னர் தமது சகோதரர் ஒருவரின் வீட்டில் நடந்த வைபவத்திற்கு நெடுந்தீவுக்கு வந்திருந்தார். பயணிகள் போக்குவரத்து கப்பல் மூலம் வந்திருந்த அவர் நெடுந்தீவில் சுதந்திரமாக தங்கியிருந்து விட்டு மறுதினம் திரும்பி சென்றிருந்தார்.  

நெடுந்தீவு மக்களை சந்திப்பதில் தொடர்ந்தும் பராமுகம் காட்டிவரும் விந்தன் தனது தனிப்பட்ட உறவினர் ஒருவரின் நிகழ்வொன்றிற்கு மட்டும் வந்திருந்த குற்ற உணர்வை மறைப்பதற்காக ஈ.பி.டி.பியினரால் தமது பயணத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அபாண்டமான அவதூறை எமது கட்சிமீது சுமத்தியுள்ளார்.

இதுபோன்று அடுத்தவர்களை அர்த்தமற்று குற்றம் சுமத்தும் இயலாமை அரசியலை கைவிட்டு நெடுந்தீவில் வந்து நின்று மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நின்று பணியாற்றும் நேர்மையான அரசியலை நோக்கி வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். நெடுந்தீவுக்கு யாரும் வந்து செல்லலாம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X