2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை விவகாரம்: பொலிஸ் விசாரணை மும்முரம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 29 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி. முகமட் ஜெப்ரி தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தகவலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மூன்று பிள்ளைகளின் தந்தையரான டானியல் றெக்ஷிசன் சம்பவ தினத்தன்று வெளியில் செல்வதாக மனைவிக்கு கூறியுள்ளார். அதன் போது மனைவி மூன்றாவது பிள்ளையின் கல்வி தொடர்பாக பாடசாலைக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து மனைவி வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த கொட்டகையில் டானியல் றெக்ஷிசன் படுத்திருந்தார். அவரது மனைவி மகளிடம் உணவு கொடுத்து அனுப்பிய போது தந்தையின் தலையிலிருந்து இரத்தம் வடிந்திருப்பதனை கண்டு, மகள் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆட்டோவில் நபரொருவருடன் புங்குடுதீவிற்கும் குறிகட்டுவானுக்கும் இடையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு றெக்ஷிசன் சென்றதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் அவருக்கு பிரச்சினைகள் எதுவுமில்லையெனவும் ஆட்டோவில் இவருடன் சென்ற நபர் குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்' எம்.சி. முகமட் ஜெப்ரி தெரிவித்தார்.

அத்துடன், 'தமது பிரதேசங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால் அதை பொலிஸாருக்கு தெரிவிப்பதற்கு மக்கள் முன்வருவதில்லை. இதனால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

அந்தவகையில் பிரதேசத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக எவர் மீதாவது சந்தேகமிருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தருமாறும்,

அவ்வாறு தகவல் தருபவர்கள் தமது பெயர், முகவரி குறிப்பிடாமல் சம்பவம் தொடர்பாகவும் சந்தேக நபர்கள் தொடர்பாகவும் தெரியப்படுத்தலாம் என்றும் அதன் மூலம் சந்தேக நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் எம்.சி. முகமட் ஜெப்ரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .