2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு மோடிக்கு மகஜர்

George   / 2015 மார்ச் 15 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் - இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் மகஜர் ஒன்றை சனிக்கிழமை (14) மன்னாரில்   கையளித்துள்ளார்.  

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தங்களை இந்த மண்ணின் மக்கள் சார்பில் வரவேற்பதில் நான் பெரு மகிழ்வடைகின்றேன். இன்றைய நாள் இப்பிரதேச மக்களுக்கு ஒரு நன்நாள். தங்களின் வருகை எமது மாகாணத்துக்கு ஒரு வரலாற்று நிகழ்வு.

பாரதத்தின் பிரதமராக தாங்கள் பெரு வெற்றியீட்டியதோடு மட்டும் நின்றுவிடாமல் தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் எல்லோராலும் வரவேற்கப்படுவதுடன் தங்களின் தேசப்பற்றையும் எடுத்துக்காட்டுகின்றது.

இதற்கு உதாரணமாக தூய்மை இந்தியா திட்டத்தை குறிப்பிடலாம். மேலும் தங்களின் இலங்கை விஜயம் அயல்நாட்டு உறவை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையை வெளிப்படுத்துகின்றது.

இந்திய அரசின் நிதி உதவியின் மூலம் மீளமைக்கப்பட்ட வடக்குக்கான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் 25 வருடங்களின் பின் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளமை எங்கள் எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

எமது மக்களுக்கான 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீண்டகால போரின் அழிவுகளால் வீடுகளை இழந்த மக்களுக்கு இத்தகைய உதவி மிகப்பெரிய வரப்பிரசாதம். இவற்றுக்காக இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்கின்றோம்.  

இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதல்களின் போதும் அமைதிப் பேச்சுக்களின் போதும் இந்தியாவின் வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்று.

இலங்கை - இந்திய உறவு நீண்ட நெடுங்கால உறவைக் கொண்டது. அதனடிப்படையிலேயே இந்திய அரசின் நலத்திட்டங்கள் இலங்கை மக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. இவ்வாறான நலத்திட்டங்களையும் இரு நாட்டு உறவையும் பாதிக்கக்கூடிய சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றது. விஷேடமாக வடபகுதி மீனவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
இந்திய மீனவர்களின் எல்லை மீறிய வருகையும், அவர்களினால் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமை அதாவது இழுவைப் படகுகளில் பயன்படுத்தும் மடி வலை போன்றவற்றை குறிப்பிடலாம்.

குறித்த இழுவைப் படகுகளில் பயன்படுத்தும் மடி வலையானது கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தேவையான வளங்களை முற்றுமுழுதாக அழித்துவிடுகின்றன.

வடபகுதி மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைமை பாதிக்கப்படுவதுடன் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்படுகின்றன. மேற்படி சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப்பாதிப்படைய செய்கின்றது.

இதன் காரணமாக இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் கைகலப்பும் ஏற்படுகின்றது. இவை மட்டுமன்றி இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் இரு நாட்டு இராஜதந்திர உறவுகள் பாதிப்படையக்கூடும். இந்தப் பிரச்சனையை தீர்க்க இராஜதந்திர ரீதியில் திட்டம் வகுக்கப்பட வேண்டும்

இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்றவகையில் சில உதவித்திட்ட கோரிக்கைகளை தங்களிடம் முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.  

வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் தலைமன்னார் - இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தை இந்திய அரசு மீள ஆரம்பிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரை மீள் குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களிலும் தற்காலிக இடங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு தொகுதி வீட்டுத்திட்டத்தை இந்திய அரசு வழங்கும் பட்சத்தில் எமது மக்களுக்கு இது பாரிய உதவியாக இருப்பதுடன் நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

பிரதான நகரங்களை மையப்படுத்தி நகர பஸ் சேவை நடத்துவதன் மூலம் நகர்ப்புற மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைத்து பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே இதற்கான பேருந்துகளை இந்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம் என இந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X