2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை: டெனீஸ்வரன்

Menaka Mookandi   / 2015 மார்ச் 15 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொருபன்

பஸ் சேவைகள் மக்களின் நலன்களின் அகற்றை செலுத்தி மக்களின் சேவையாக இருக்கவேண்டும். இதிலிருந்து தவறி பயணிகளுக்கு அசௌகரியப்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சாலைகளுக்கு பஸ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற போது, அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றபோது, சாரதிகளும் நடத்துநர்களும் தமக்கும் ஏற்படும் போட்டியில் பயணிகளை அசௌகரிப்படுத்துகின்றனர். இது தொடர்பாக எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஒரிரு காட்சிகளை நான் நேரில் பார்த்து எச்சரித்துள்ளேன்.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இரண்டு பேரூந்துகள் சமாந்தரமாக வீதியில் ஒடும்போது, இருவரும் உரையாடிக் கொண்டு வந்ததை நான் நேரில் அவதானித்து அவர்களை இடைநிறுத்தி எச்சரித்திருக்கின்றேன். இது போல பல சம்பவங்கள் போக்குவரத்தின் போது இடம்பெறுகின்றன.

பஸ்ஸை வீதியில் நிறுத்திவிட்டு கம்பிகள், கட்டைகள் மூலம் சண்டையிடுகின்றார்கள். இவ்வாறான சம்பவங்கள் இனியும் வெறும் எச்சரிப்பில் மட்டும் முடித்துவிட முடியாது. இவ்வாறு செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நடைமுறை தவறிய போக்குவரத்து சேவையால் கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள், மாணவர்கள் ஆகியோர் சிரமப்படுவதை ஊழியர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

எமக்கு தற்போது கிடைத்துள்ள இந்த பஸ்களை நாம் உதாசீனம் செய்யாது சரிவர பயன்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் இருந்த பேரூந்துகள் சரிவர பேணப்படவில்லை. நாம் எமது சொந்த பணத்தில் வாங்கும் பொருட்களை எவ்வாறு பாதுகாப்போமோ அதுபோன்று இந்த பொது உடமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

மக்கள் செலுத்தும் வரிப்பணம் தான் இவ்வாறு வாகனங்களாகவும், வளங்களாகவும், பொருட்களாகவும் மீளக்கிடைக்கின்றன. அதை நாங்கள் சரிவர பேணி பாதுகாக்கவேண்டும்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X