2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கூட்டுறவுப் பணியாளர்களுக்கு 30% சம்பள உயர்வு

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் 30 வீத சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மரணமடைந்த பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் உதவு தொகை வழங்கப்படும் என்றும் வடமாகாண விவசாய, கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள பனை - தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண பனை - தென்னைவள அபிவிருத்திச் சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியின் போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'கூட்டுறவுப் பணியாளர்கள் மிக நீண்டகாலமாக தங்கள் சம்பள உயர்வு தொடர்பில் முறையிட்டு வருகிறார்கள். இந்த விடயம் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு சம்பள உயர்வு வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்றார்.

'இந்தத் தீர்மானத்தின்படி, வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் யாவும் இந்த வருடம் தை மாதம் முதல் நடைமுறைக்கு வரும்வகையில் 30 வீத சம்பள உயர்ச்சியை வழங்க வேண்டும். இந்த சம்பள உயர்வை வழங்குவதற்கான கணிப்பீட்டு விபரங்கள் அடங்கிய சுற்றுநிரூபம், கூட்டுறவுச் சங்கங்களின் நெறியாளர் குழுவுக்கு மிக விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

பனைத் தொழிலாளர்களும் மீன்பிடித் தொழிலாளர்ளைப் போன்றே தொழிலின்போது ஆபத்துகளை எதிர்கொள்பவர்களாக உள்ளனர். ஒவ்வொரு வருடமும் பனையில் இருந்து தவறி விழுந்து பலர் மரணிக்கின்றார்கள். பனைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள். இதைக் கருத்திற்கொண்டு பனையில் இருந்து தவறி வீழ்ந்து மரணமடைந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு எனது அமைச்சு நிதியிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் உதவு தொகையாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.
 
வடமாகாணசபை உருவாக்கப்பட்ட 2013ஆம் ஆண்டை ஒரு கால எல்லையாகக் கொண்டு, 2013ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொழிலின்போது மரணமடைந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் இந்த உதவு தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இவர்கள், தங்கள் மாவட்டத்துக்குரிய பனை - தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின்  ஊடாக அமைச்சுக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண பனை - தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் ந.கணேசனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வடமாகாணசபை உறுப்பினர்களான அ.பரஞ்சோதி, வே.சிவயோகம், முன்னாள் தலைவர் க.நடராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X