2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஒற்றுமைதான் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும்: சி.வி

Gavitha   / 2015 மார்ச் 16 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

எங்களுக்கு கிடைக்கும் வசதிகள் மிகக் குறைவாக இருந்தாலும் எங்களிடையே இருக்கும் ஒற்றுமைதான் எங்களுடைய வருங்காலத்தை நல்ல ஒளிமயமான காலமாக மாற்றித்தரக் கூடியது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் நாங்கள் மற்றவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாங்களே எங்களோடு ஒரே உறவாக ஒற்றுமைப்பட்டு, வருங்காலத்தையும் நாங்களே தீர்மானிக்கக் கூடிய, முன்னெடுத்து செல்லக்கூடியவாறு ஒற்றுமைப்பட்டு, கடமையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடையின் கீழ், கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் தும்பளை தெற்கில் 18 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பற்றிக் உற்பத்தி நிலையத்தை  ஞாயிற்றுக்கிழமை (15), முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'வட மாகாணத்திலுள்ளோர், யார் எதைத் தந்தாலும் தராவிட்டாலும் நாங்களாகவே எங்களை வளப்படுத்தி முன்னேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடியவர்கள் என்பதை எடுத்துக் காட்ட கூடியவர்களாக இருக்க வேண்டும்.

போர்க் காலங்களில் இரவில் தண்ணீரை விட்டு, அதற்கு மேல் எண்ணையை விட்டு, சிறு குப்பி விளக்கில் படித்து பாடங்களில் சித்தி பெற்றதைப் போன்று, கிடைக்கும் வளங்கள் எவ்வளவுதான் குறைவாக இருந்தாலும் அந்த வளங்களை நல்ல வளங்களாக மாற்றி வருங்காலத்தை ஒளிமயமான வருங்காலமாக மாற்றக்கூடிய நிலையிலே நாங்கள் இருக்கவேண்டும்.

உங்களை பார்த்து மற்றவர்களும் கூட்டுறவு அடிப்படையிலோ, கிராம அபிவிருத்தி அடிப்படையிலோ சேர்ந்து முன்னேற இறைவன் துணைபுரிய வேண்டும்' என தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பற்றிக் உற்பத்தி நிலையத்துக்கு முதலமைச்சர் இரண்டு கணினிகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.
இந்நிகழ்வுக்கு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண உறுப்பினர்களான பா.கஜதீபன்   ச.சுகீர்தன், எஸ்.சர்வேஸ்வரன் பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X