2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'சுன்னாகம் நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை'

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்துள்ளது.

தூய குடிநீருக்கான செயலணியின் அமர்வு வெள்ளிக்கிழமை (20), சுகாதார அமைச்சின் யாழ்ப்பாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்செயலணியில் கலந்துகொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக விளக்கமளித்த நிபுணர்குழுவின் பிரதிநிதிகள், அதன்பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறிய நிபுணர்குழுவினர் தெரிவித்ததாவது,
ஆய்வு நோக்கத்துக்காக சுன்னாகம் மின்நிலையத்தை மையப்படுத்தி எட்டுத் திசைகளிலும் 200 மீற்றர் இடைவெளியில் 2 கிலோமீற்றர் தூரத்துக்கான மாதிரி வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தற்சமயம் ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்துக்கு ஆய்வுகளின் முதலாவது கட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தமிழ்ச் சங்கமும் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் உறவுகளும் இணைந்து அண்மையில்  வாங்கி அனுப்பிவைத்துள்ள புரொக் 4000  என்ற கருவி கழிவு எண்ணெயில் இருக்கக்கூடிய ஆபத்தான இரசாயனங்களை அளவிடக்கூடியது.

இந்தக் கருவியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்களான பென்சீன், தொலுயீன், ஈதையில் பென்சீன், ஓதோ சைலின், பரா சைலின் மற்றும் மெற்றா சைலின் போன்ற பதார்த்தங்கள் 85 வீதமான மாதிரிகளில் முற்றாக இருக்கவில்லை. 15 சதவீதமான மாதிரிகளில் நியம அளவிலும் பார்க்க 200 மடங்கு குறைவான அளவிலேயே அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு கிலோமீற்றர் சுற்று வட்டத்தினுள் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் கொழும்பில் உள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அனுப்பி பார உலோகத்துக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது ஆய்வு முடிவுகளின்படி ஈயம், கட்மியம், ஆர்சனிக், வனேடியம், நிக்கல் போன்ற ஆபத்தான உலோக நஞ்சுகள் இருப்பது கண்டறியப்படவில்லை.

தொடர்ந்து இரண்டாம் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் வரும் 25 ஆம் திகதி தரையை ஊடுருவும் றேடார் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் நிபுணர்குழுவைச் சோந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த கலாநிதி கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத்தின் தலைவர் கலாநிதி அ.அற்புதராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X