2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் : டக்ளஸ்

Kanagaraj   / 2015 மார்ச் 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர்த் தாங்கி நீரில், நச்சுத் திராவகத்தை கலந்த விசமிகளின் மிக மோசமான சமூகவிரோத செயலைக் கண்டிக்கும் அதேவேளை குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழான ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர்த் தாங்கி நீரில் விசமிகள் சிலரால் திட்டமிட்ட வகையில் நச்சுத் திராவகம் கலக்கப்பட்டிருந்த நிலையில் நீரைப் பருகிய மாணவர்கள் நேற்றைய தினம் (19) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர், மேலும் தெரிவிக்கையில் எமது மக்கள் கடந்த பல காலங்களாக யுத்தத்தின் கோரப்பிடியின் அவல வாழ்வை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அமைதிச் சூழலில் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளையும் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளையும் இயல்பான சூழலில் முன்னெடுக்க முடியாமல் இருந்து வந்ததுடன் என்ன நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் நாளும் பொழுதும் அங்கலாய்ப்புடனும் அவநம்பிக்கையுடனுமே வாழ்ந்து வந்தனர்.

கொடிய யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் குடாநாடு மட்டுமன்றி வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மாணவர்கள் ஓரளவு இயல்புச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதைய சூழலில் தமது கற்றல் செயற்பாடுகளில் மட்டுமன்றி கல்விசார் ஏனைய துறைகளிலும் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் கண்டு வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்நிலையில், இன்றைய அமைதிச் சூழலை விரும்பாத சில விசமிகள் சமூக ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் திட்டமிட்டு பேராபத்து மிக்கதும் கீழ்த்தரமானதுமான முறையில் பாடசாலை நீர்த்தாங்கியிலிருந்த நீரில் நச்சுத் திராவகத்தை கலந்து மிகக் கேவலமானதும் கோழைத்தனமானதுமான செயலை பாடசாலைச் சமூகத்தை இலக்கு வைத்து இச் சமூகவிரோதச் செயலை முன்னெடுத்துள்ளனர்.

இச்செயல் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாதது என்பதுடன் உரிய விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு சமூகவிரோதிகள் இனங்காணப்படும் அதேவேளை அவர்களைச் சட்டத்தின் முன்னிறுத்திப் பாரபட்சமற்ற வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகுமென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்களுக்கும், அதிபர், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதலைத் தெரிவிப்பதாகவும்; தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின் பேரில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. வி. குகேந்திரன் (ஜெகன்), போதனா வைத்தியசாலைக்குச் நேற்றைய தினம்  சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவச் செல்வங்களைப் பார்வையிட்டதுடன் பெற்றோர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X