Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண சபை, ஆரம்பத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக இருந்த போதிலும், சபை முடிவடைகின்ற போது, அத்தகைய ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுவதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கவலை தெரிவித்தார்.
அத்துடன், கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறியிருக்கின்ற நிலையில், புதிய கட்சிகள் உருவாகக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில், நேற்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 2013ஆம் ஆண்டில், கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இணைந்து, 30 உறுப்பினர்களைக் கொண்ட சபையாக, வடமாகாண சபை ஆட்சி அமைக்கப்பட்டு ஒற்றுமையாக முன்னெடுக்கப்பட்டதெனவும் ஆனால், சபை முடிவடைகின்ற இந்த நேரத்தில், அவ்வாறான ஒற்றுமை தற்போது இல்லையெனவும் தெரிவித்தார்.
நான்கு கட்சிகளாக இருந்த கூட்டமைப்பு தேய்ந்து, தற்போது மூன்று கட்சிகளாகவே இருப்பதாகத் தெரிவித்த அவர், காலப்போக்கில், புதிய கட்சிகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் கூறினார்.ஆனால், தான் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் நிறைவடைகின்ற நிலையில், மாகாண சபை எதனையுமே செய்யவில்லை எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், இந்த 5 ஆண்டுக் காலத்தில், தனக்கான சுயகட்டுப்பாட்டை வைத்திருந்ததாகவும் கூறினார்.
ஆனால் அந்தத் தடை, புதன்கிழமை (24) நள்ளிரவுடன் நீங்குமெனவும் அதன்பின்னர், அரசியல் ரீதியான கருத்துகளை இனி தான் சொல்வதற்கு சுதந்திரம் இருப்பதாகவும் ஆகவே, இனிமேல் அவ்வாறான கருத்துகளை தான் சொல்லவுள்ளதாகவும், அவர் கூறினார்.
முதலாவது வடக்கு மாகாண சபையின் காலம், புதன்கிழமை (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், சபையின் இறுதி அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலக சபா மண்டபத்தில், இன்று (23) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தச் சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், தற்போது வரையான ஐந்தாண்டுக் காலத்துக்குள், 134 அமர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், சபையின் இறுதி அமர்வான இன்றையதினமே, சபையின் முதலாவது விடயமாக, சபைக்கான கீதம் முன்மொழியப்பட்டு அங்கிகரிக்கப்பட இருக்கின்றது.
இதற்கு அடுத்ததாக, முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago