2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் முன்னேற்றம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

நாட்டின் எதிர்கால பொருளாதார நிலை குறித்து கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் மூலம் வெளியாகியிருந்த இரு வேறு சாதகமான எதிர்வுகூறல்களை தொடர்ந்து பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆயினும் கடந்த சனிக்கிழமை முதல் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றமையால், இவ்வாரம் பங்குச்சந்தை நடவடிக்கைகள் சற்று வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றமையை அனுமானிக்க முடிவதுடன், 2012ஆம் ஆண்டின் இறுதி முழுமையான பங்கு கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறும் வாரமாகவும் இந்த வாரம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,522.72 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 5045.20 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3022.79 ஆகவும் அமைந்திருந்தன.

டிசெம்பர் 10ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,736,744,514 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 27,780 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 26,379 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,401 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பேருவெல வோல்கின், பிடிஎல், தங்கரீன், சிஎஃவ்ஐ மற்றும் சிங்க லங்கா போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஹன்டர்ஸ், எஸ்எம்பி லீசிங், கொன்வீனியன்ஸ் பூட்ஸ், மெக்வூட்ஸ் எனர்ஜி மற்றும் பிசி பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 56,000.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 51,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1500.00 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 129.99 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 209.95 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .