2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை தொடர்ந்து எரிபொருள், மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு?

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ச.சேகர்)

2013ஆம் ஆண்டுக்கான நிதித்துறை மற்றும் நாணயக் கொள்கைகள் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிட்டிருந்த முக்கிய அறிவித்தல்களை தொடர்ந்து எரிபொருள், மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், ”பல தசாப்த காலமாக இலங்கையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை போன்றவற்றுக்கு அரசாங்கத்தின் மூலம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. அத்துடன் நாணயக் கொள்கைகளிலும் இந்த செயற்பாடு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

’பொதுத்துறைகளுக்கு வழங்கப்படும் கடன் எல்லை 2012ஆம் ஆண்டு பெருமளவு அதிகரித்திருந்தது. விசேடமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை போன்றவற்றுக்கு அதிகளவு கடன் வழங்கப்பட்டிருந்தது. நாம் இந்த இரு திணைக்களங்களுக்கு கடன் வழங்குவதை ஊக்குவிக்காத போதிலும், இந்த இரு திணைக்களங்களும் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருந்த நட்டங்களை கருத்தில் கொண்டு இந்த கடனை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம். இந்த நிலை மேலும் தொடர முடியாது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது. விலைகளை தளர்த்தி சர்வதேச சந்தை விலைகளுடன் நேரடியாக தொடர்புபடுத்த வேண்டிய நிலை குறித்து இந்த வருடம் அரசு ஆராயும்” என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின், தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கமைய, இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகிக்கப்படும் எரிபொருளின் விலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது. இதன் விளைவாக இதர பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதவிடயமாகிவிடும்.
2012ஆம் ஆண்டில் பொதுத்துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 63 பில்லியன் ரூபாவினால் அதிகரித்திருந்தது. இதில் பெரும் பகுதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபைக்கும் வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையின் மொத்த இறக்குமதியில் 25 வீதத்தை எரிபொருட்கள் கொண்டிருந்தன. நீண்ட கால நோக்கிலமைந்த மீள் பயன்படுத்தப்படக்கூடிய மாற்று வலு பிறப்பாக்கிகளின் தேவை இலங்கை பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளது.

2011ஆம் ஆண்டில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 94 பில்லியன் ரூபாவையும், இலங்கை மின்சார சபை 25.5 பில்லியன் ரூபாவையும் நட்டமாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .