2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கில செயற்றிட்டத்தில் சிறந்து விளங்கிய இரு திருமலை பாடசாலைகளின் மாணவர்களுக்கு வெகுமதி

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமானது தனது 'இளம் பயில்வோருக்கான ஆங்கிலம்' (English for Young Learners) எனும் தனது செயற்றிட்டத்தில் மிகவுயர்ந்த சாதனைகளை நிலைநாட்டியவர்களுக்கு அண்மையில் வெகுமதி வழங்கி கௌரவித்துள்ளது. திருகோணமலை சீனக்குடா நாலந்தா மகா வித்தியாலயம் மற்றும் சீனக்குடா தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரான என்.ஏ.ஏ.புஸ்பகுமார, லங்கா ஐ.ஓ.சி. பி எல் சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுபோத் டக்வல மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

'இலங்கையில் நாம் மேற்கொண்டுவரும் பரந்துபட்ட அளவிலான கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்ட (CSR) முன்னெடுப்புக்களுள் ஓர் அங்கமாக இச் செயற்றிட்டம் அமைகின்றது. எந்தவொரு நாட்டினையும் சேர்ந்த சிறுவர்கள் அந்நாட்டின் ஒரு தேசிய சொத்தாக திகழும் அதேநேரம், எதிர்காலத்திற்கான தேசத்தின் நம்பிக்கையாகவும் உள்ளனர். இதனை மனதிற்கொண்டே, எமது கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்ட முன்னெடுப்புக்களின் கீழ் வேறுபட்ட வழிகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதிலும் அவர்களுக்கு கல்வி அறிவூட்டுவதிலும் நாம் எப்போதும் முனைப்புடன் இருக்கின்றோம்' என்று லங்கா ஐ.ஓ.சி. பி எல் சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுபோத் டக்வல தெரிவித்தார்.

தரம் 6 தொடக்கம் 11 வரை கற்கும் ஆண்கள், பெண்கள் என மொத்தமாக 140 மாணவர்கள் இதற்கென உள்வாங்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 54 மணித்தியாலங்களைக் கொண்ட பேச்சு மற்றும் எழுத்து கற்கைப் பணியை உள்ளடக்கிய 09 மாத செயற்றிட்டத்தை மேற்கொண்டனர். தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த செயற்றிட்டமானது கிராமப்புறச் சிறுவர்கள், தொடர்பாடலின் ஒரு முறைமைசார் வளமாக ஆங்கில மொழியைக் கற்றுத் தேர்வதற்கான வசதிகளை வழங்குகின்றது. அந்தச் சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களாகின்றபோது செயற்றிறண்மிக்க மற்றும் நம்பிக்கையுள்ள ஆங்கில பேச்சாளர்களாக அவர்களை திகழச் செய்வதற்காக - ஒலியைப் பயன்படுத்தியும் சௌகரியமான முறைகளின் ஊடாகவும் இச்செயற்றிட்டம் முன்னேற்றரமான விதத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 

எழுத்தமைவு, பேச்சாற்றல், வாசிப்பு மற்றும் கேட்டல் ஆகிய மொழிசார் திறன்கள் நான்கினையும் உள்ளடக்கி இச் செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் பொருட்டு, Cosmopolitan Learning Academy கல்வியகத்தின் சேவைகளை லங்கா ஐ.ஓ.சி. பி எல் சி நிறுவனமானது ஒப்பந்த சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த செயற்றிட்டத்தில் இருந்து முழுப் பயனையும் பெற்றுக் கொள்ளும் முகமாக அனைத்து மாணவர்களும் ஆங்கில வகுப்புக்களுக்கு முறையாக சமூகமளிக்கின்றனரா என்பதை சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .