2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தம் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களிலும் பிரதிபலிப்பு

A.P.Mathan   / 2013 மார்ச் 03 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூலம் கடந்த வாரம் இலங்கைக்கெதிராக வெளியாகியிருந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஜெனிவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக குற்றப்பிரேரணைகள் நிறைவேற்றப்படும் எனும் நிலைப்பாடு நிலவுவதை தொடர்ந்து, தொடர்ந்தும் சரிவான நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,652.69 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3206.85 ஆகவும் அமைந்திருந்தன. இது முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஆகும்.

பெப்ரவரி 25ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,441,502,607 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 18,679 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 17,757 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 922 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பிசிஎச் ஹோல்டிங்ஸ், ஏ.ஐ.ஏ இன்சூரன்ஸ், யூனியன் கெமிக்கல்ஸ், நுவரஎலிய மற்றும் ஆசிரி சேர்ஜிக்கல்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

நேஷன் லங்கா (உரிமைப்பங்குகள்), ஒஃபிஸ் எக்யுப்மன்ட், ஆசிரி சென்ட்ரல், மிரமர் மற்றும் ஒரியன்ட் காமன்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 53,200.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 49,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1470.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 129.07 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 196.21 ஆக காணப்பட்டிருந்தது. தொடர்ந்தும் ஸ்ரேளிங் பவுணுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரமும் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .