
நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வெளிநாடுகளில் வசிக்கும் டயஸ்பொராவுக்கு அதிகளவு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான முதலாவது பிரசார ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த சனிக்கிழமை டுபாய் நகரில் ஆரம்பமானது.
இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பல அலகு நம்பிக்கை நிதியங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள், பங்கு முகவர் நிறுவனங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோரைக் கொண்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா கருத்து தெரிவிக்கையில், ”டயஸ்பொராவின் மூலம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வருமானமாக நாட்டினுள் செலுத்தப்படுகிறது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 10 வீதமாகும். வெளிநாட்டு டயஸ்பொராக்களின் மூலம் அனுப்பி வைக்கப்படும் தொகை கடந்த ஆண்டில் 16.8 வீதத்தால் அதிகரித்திருந்தது. நிபுணத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றும் நபர்களின் மூலமாக அனுப்பி வைக்கப்படும் தொகை 33 வீதத்தால் வளர்ச்சியடைந்திருந்தது.
நாம் இதுபோன்ற விழிப்புணர்வு திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு இரு பிரதான நோக்கங்களை கொண்டுள்ளோம். முதலாவதாக வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையை சேர்ந்த நிபுணர்களுக்கு இலங்கையின் மூலதனச்சந்தையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விளக்கங்களை வழங்குவது மற்றும் இரண்டாவதாக இலங்கையில் காணப்படும் அபிவிருத்தி நிலைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வெளிநாடுகளில் வசிக்கும் டயஸ்பொராவினை அறிவுறுத்துவதன் மூலம் அவர்களை இலங்கையின் தூதுவர்களாக நியமிப்பது போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்” என்றார்.