Freelancer / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களை அவமதிக்கும் வகையிலும், கீழ்த்தரமான முறையிலும் உரையாற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடத்தைகள் குறித்து ஆராய்ந்து, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) அன்று முப்படைச் சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதியமைச்சர் சுனில் வட்டகல, எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆளுங்கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவரை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பிரயோகித்ததாகக் குற்றம் சுமத்தினார்.
"கடந்த பாராளுமன்றத்தில் தனது பதவியைப் பணத்திற்காக விற்பனை செய்தவரே இவ்வாறு கீழ்த்தரமாகப் பேசுகிறார்" என பிரதியமைச்சர் வட்டகல இதன்போது சாடினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இரு தரப்பினரும் சபையில் கண்ணியமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். "எதிர்க்கட்சி உறுப்பினர் கீழ்த்தரமாகப் பேசினார் என்பதற்காக, பிரதியமைச்சரும் சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. இவ்வாறான வார்த்தைகளை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.
சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விவாதத்தின்போது பயன்படுத்தப்பட்ட சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் அனைத்தும் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகரின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, மேலும் உரையாற்றுகையில்,
"எதிர்க்கட்சியில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் காட்டுமிராண்டித்தனமாகவும், கேவலமாகவும் நடந்துகொள்கிறார்கள். குறிப்பாகப் பெண் உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் அவர்கள் பேசும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய நடத்தைகள் குறித்து முறையாக விசாரணை நடத்தி, நிலையியல் கட்டளைகளுக்கு இணங்க அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்," என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பு உறுப்பினர்களும் சபையில் ஒழுக்கமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். உறுப்பினர்களின் இத்தகைய பேச்சுக்கள் மற்றும் நடத்தைகள் குறித்து சபாநாயகரின் கவனத்திற்குத் தான் கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago