2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அமெரிக்காவுக்கு கியூபா ஜனாதிபதி எச்சரிக்கை

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கியூபா ஒரு அமைதியான நாடு, ஆனால் அமெரிக்கா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மிகுயெல் டயஸ்-கானெல் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த பெப்ரவரி மாதம் கியூபா மீது எண்ணெய் தடையை விதித்தார். அத்துடன் புளோரிடா கடற்கரையிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள இந்த சோசலிச நாட்டின் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல்வேறு மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, "ஈரான் மீதான போர் நடவடிக்கைகளை முடித்த பிறகு, நாம் கியூபா பக்கம் திரும்பலாம்" என்று ட்ரம்ப் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ஹவானாவில் (சனிக்கிழமை) செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கியூபா ஜனாதிபதி டயஸ்-கானெல், அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பிற்கு கியூபா அரசு முதலிடம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், "கியூபா ஒருபோதும் போரை விரும்புவதோ அல்லது அதனைத் தூண்டுவதோ இல்லை. ஆனால் எமது தாய்நாட்டைப் பாதுகாக்கப் போர் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதுமில்லை" என்று எச்சரித்துள்ளார்.

  ஒருவேளை அமெரிக்கா கியூபாவைத் தாக்க முடிவு செய்தால், அது ஒரு கடினமான போராகவே அமையும். ஏனெனில், கியூபாவின் பாதுகாப்பு வியூகமானது 'மக்களின் போர்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு வெளிநாட்டுத் தாக்குதல் ஏற்படும் போது, அதை முறியடிக்க அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து களமிறங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .