2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவின் தொடர் தோல்விகள்: ஐவர் நீக்கம்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 20 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரு போட்டிகளிலும் தோல்வியடைந்து, இதுவரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள அவுஸ்திரேலிய அணியில் காணப்படும் குழப்பங்களை, அவ்வணியின் தேர்வாளர்கள், நேற்று அறிவித்த குழாம் வெளியிட்டது.

அதுவரையில் பிரதம தேர்வாளராக இருந்த றொட் மார்ஷ் பதவி விலகியதைத் தொடர்ந்து, இடைக்கால பிரதம தேர்வாளராகப் பதவியேற்ற ட்ரெவர் ஹொன்ஸ் தலைமையில் தெரிவான முதல் குழாமாக இது அமைந்தது.

இதில், 2ஆவது போட்டியில் பங்குபற்றிய ஜோ பேர்ண்ஸ், அடம் வோஜஸ், கலம் பேர்குசன், பீற்றர் நெவில், ஜோ மெனி ஆகியோர் இக்குழாமில் இடம்பெறவில்லை. இதில் வோஜஸ் மாத்திரம், ஷெபீல்ட் ஷீல்ட் போட்டியில், தலையில் பந்து பட்டமையால் ஏற்பட்ட உபாதையைத் தொதடர்ந்து சேர்க்கப்படவில்லை. ஏனைய நால்வரும், திறமை வெளிப்பாடுகள் காரணமாகவே நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேர்குசன், ஜோ மெனி இருவரும் தங்களது டெஸ்ட் அறிமுகங்களை மேற்கொண்ட பின்னர் நீக்கப்பட்டுள்ளனர்.

குழாமுக்குள் மற் றென்ஷோ, பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப், நிக் மடின்சன், சட் சேயர்ஸ், ஜக்ஸன் பேர்ட், மத்தியூ வேட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் றென்ஷோ, ஹான்ட்ஸ்கொம்ப், மடின்சன் ஆகியோர், அடுத்த போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வது உறுதியாகியுள்ளது. மத்தியூ வேட் விளையாடுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்துக்கு, சட் சேயர்ஸும் ஜக்ஸன் பேர்டும் போராடவுள்ளனர். சேயர்ஸ் தெரிவுசெய்யப்பட்டால், அவரும் அறிமுகத்தை மேற்கொள்வார்.

சுழற்பந்து வீச்சாளரான நேதன் லையனும் குழாமிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவருக்குப் பதிலாகத் தெரிவாகவிருந்த ஸ்டீவன் ஓஃப் கீ, உபாதை காரணமாக வெளியேற்றப்பட, லையன் தப்பினார்.

24ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான குழாம்:
டேவிட் வோணர், மற் றென்ஷோ, உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப், நிக் மடின்சன், மத்தியூ வேட், மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட், சட் சேயர்ஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .