2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஐ.சி.சி விருதுகள்: சிறந்த வீரராக அஷ்வின்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) வருடாந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதில், 2015-16 பகுதிக்கான சிறந்த வீரராக, இந்திய அணியின் சகலதுறை வீரர் இரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவாகியுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் அவரே வெற்றிகொண்டார்.

2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் இவ்வாண்டு செப்டெம்பர் 20ஆம் திகதி வரையிலும் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையில், இவ்விருதுகள் வழங்கப்பட்டன. அக்காலப்பகுதியில், 8 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள், ஓர் அரைச்சதம் உள்ளடங்கலாக 42 என்ற சராசரியில் 336 ஓட்டங்களையும், 14 இனிங்ஸ்களில் 6 ஐந்து விக்கெட் பெறுதிகள், ஒரு பத்து விக்கெட் பெறுதி உள்ளடங்கலாக 15.39 என்ற சராசரியில் 48 விக்கெட்டுகளையும் அஷ்வின் கைப்பற்றியிருந்தார். இது, அவருக்கு சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதை, இலகுவாகப் பெற்றுக் கொடுத்தது.

விருக்கான காலப்பகுதியில் இந்திய அணி விளையாடிய 13 போட்டிகளில், வெறுமனே 3 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அஷ்வின், 47.33 என்ற சராசரியில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றியிருந்தார். ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய அசாதாரண திறமை வெளிப்பாடுகே, சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.

குறித்த காலப்பகுதியில், டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதிகபட்ச ஓட்டங்களை (14 டெஸ்ட்களில் 1,272, 19 ஒ.ச.போட்டிகளில் 941 ஓட்டங்கள்) பெற்ற ஜோ றூட், அஷ்வினுக்கான போட்டியை வழங்கியிருக்கக்கூடும். ஆனால், அஷ்வினுக்கே, அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சிறந்த வீரர் விருதை, தென்னாபிரிக்காவின் குயின்டன் டீ கொக் வென்றார். 16 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய அவர், 4 சதங்கள், ஓர் அரைச்சதம் உள்ளடங்கலாக 97.42 என்ற அடித்தாடும் வீதத்தில், 56.64 என்ற சராசரியில் 793 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அவருக்குப் போட்டியை வழங்கியிருக்கக்கூடியவர்களாக, இங்கிலாந்தின் ஜோ றூட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் காணப்படுகின்றனர். றூட், 18 இனிங்ஸ்களில் 2 சதங்கள், 8 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 90.83 என்ற அடித்தாடும் வீதத்தில் 55.35 என்ற சராசரியில் 941 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ், 17 இனிங்ஸ்களில் 4 சதங்கள், 4 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 97.75 என்ற அடித்தாடும் வீதத்தில் 57.12 என்ற சராசரியில், 914 ஓட்டங்களைக் குவித்திருந்தார். பந்துவீச்சாளர்களில், குறிப்பிடத்தக்கதாக, எவரும் ஆதிக்கம் செலுத்தியிருக்கவில்லை. ஆனால், 8 இனிங்ஸ்களில் 15.95 என்ற சராசரியில், ஓவருக்கு 4.98 ஓட்டங்கள் என்ற அளவில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த மற் ஹென்றி, குறிப்பிடத்தக்க ஒருவராக உள்ளார்.

இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அதிசிறந்த பெறுபேறை வெளிப்படுத்தியமைக்கான விருது, கார்லொஸ் பிறத்வெய்ட்டுக்குக் கிடைத்தது. உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டியில், 4 பந்துகளில் தொடர்ச்சியாக ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக, 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை அவர் பெற்றிருந்தார். அவரது துடுப்பாட்டமே, தோல்வியடையும் நிலையிலிருந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு, சம்பியன் பட்டத்தை வழங்கியிருந்தது.

சிறந்த வளர்ந்துவரும் வீரர் விருது, பங்களாதேஷின் முஸ்தபிஸுர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. விருதுக்கான காலப்பகுதியில் 8 ஒருநாள் சர்வதேசப் போட்டி விக்கெட்டுகளையும் 19 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார்.

சிறந்த விளையாட்டுணவர்வுடன் போட்டிகளின் பங்குபற்றியமைக்கான விருது, பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக்குக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடுவர் விருது, மராயஸ் எரஸ் மஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. துணை அங்கத்துவ நாடுகளில் சிறந்த வீரர் விருதை, ஆப்கானிஸ்தானின் அதிரடி வீரர் மொஹமட் ஷஷாத் வென்றார். அவர், 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 699 ஓட்டங்களையும், 17 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 533 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இந்த விருதுகள், ராகுல் ட்ராவிட், குமார் சங்கக்கார, கரி கேர்ஸ்டன் ஆகியோரைக் கொண்ட குழுவால் தீர்மானித்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .