Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியின் வொல்வ்ஸ்பேர்க்கில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஜேர்மனி, சேர்பியா ஆகியவற்றுக்கிடையேயான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் ஆரம்பத்தில் ஜேர்மனிய ஆதிக்கம் செலுத்தியபோதும், அவ்வணியின் பின்கள வீரர்கள் சேர்பியாவின் மூலையுதையொன்றை கையாளத் தவறியிருந்த நிலையில், போட்டியின் 12ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலைப் பெற்ற சேர்பியாவின் முன்கள வீரர் லூகா ஜோவிக், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
இந்நிலையில், இரண்டாவது பாதியில் முன்கள வீரர் மார்கோ றொய்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சிறப்பாக விளையாடியிருந்த ஜேர்மனி, 69ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் லியோன் கொரெட்ஸ்கா பெற்ற கோலோடு போட்டியை இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது.
இப்போட்டியின் இறுதிநிமிடங்களில், ஜேர்மனியின் முன்கள வீரர் லெரோய் சனேயின் காலில் மிதித்த சேர்பியாவின் மிலான் பவ்கோவ், சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டநிலையில், சனே மைதானத்திலிருந்து வலியுடன் வெளியே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியின் பின்கள வீரர்களான மற் ஹம்மெல்ஸ், ஜெரோம் போட்டாங், முன்கள வீரரான தோமஸ் முல்லர் ஆகியோர் இனி ஜேர்மனிக்காக கருத்திற் கொள்ளப்படமாட்டார்கள் என இம்மாத ஆரம்பத்தில் அவ்வணியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோ தெரிவித்த பின்னர் ஜேர்மனி விளையாடிய முதலாவது போட்டி இதுவாகும். 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஜேர்மனிய அணியில் இடம்பெற்றிருந்த கோல் காப்பாளர் மனுவல் நோயர் மாத்திரமே இப்போட்டியை ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியகள வீரர் டொனி க்றூஸ் மாற்று வீரராகக் காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டர்டாமில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள யூரோ கிண்ண தகுதிகாண் போட்டியில், நெதர்லாந்தை ஜேர்மனி எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வேல்ஸில் இன்று அதிகாலை இடம்பெற்ற வேல்ஸ், ட்ரினிடாட் அன்ட் டொபாகோ அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நிமிடங்களில், வேல்ஸின் முன்கள வீரர் பென் வூட்பேர்ண் பெற்ற கோலின் காரணமாக அவ்வணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
குறித்த போட்டியில், வேல்ஸின் முன்கள வீரரான கரெத் பேல், மத்தியகள வீரரான ஆரோன் றம்சி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago