Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் சாம் அலர்டைஸ், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினதும் இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தினதும் விதிகளை மீறுவது தொடர்பாக அறிவுரை வழங்கியமை காரணமாக, அவரது பதவியை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராகப் பதவியேற்றும் இரண்டு மாதங்களே ஆகின்ற நிலையில், வணிகர்களாக வேடமிட்ட ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்த கருத்துகளே, சிக்கலில் அவரைத் தள்ளியுள்ளன.
சாமல் அலர்டைஸைச் சந்தித்த டெய்லி டெலிகிராப் பத்திரிகையைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள், இங்கிலாந்து கால்பந்தாட்டத்திலுள்ள வீரர்கள் பரிமாற்றத்தில் பணம் உழைப்பது குறித்துக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்த அவர், இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தாலும் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தாலும் தடை செய்யப்பட்டுள்ள மூன்றாம்தரப்பு உரிமைப்படுத்தல் முறையைப் பயன்படுத்தி, எவ்வாறு பணமுழைப்பது என விளங்கப்படுத்தியுள்ளார்.
அத்தோடு, சில முகவர்கள் அதைத் தொடர்ந்தும் செய்து வருவதாகவும் தடையை மீறிச் செயற்பட முடியுமெனவும் அவ்விடயத்தில் அதிகளவு பணம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். அத்தோடு, இதைத் தடை செய்யும் விதியை, "கேலிக்குரியது" எனவும் அவர் அழைத்தார்.
அதைத் தவிர, குறித்த ஊடகவியலாளர்களின் போலியான முகவர் நிறுவனத்துடன், 400,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கான ஒப்பந்தமொன்றுக்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார். இது, முரண்பாடான நலன்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடும். ஏனெனில், அந்த முகவர் நிறுவனத்தால் முகாமை செய்யப்படும் வீரருக்குச் சார்பாக, சாம் அலர்டைஸ் நடக்கக்கூடும்.
இவற்றுக்கு மேலதிகமாக, இங்கிலாந்தின் முன்னாள் முகாமையாளர் றோய் ஹொட்ஜ்ஸன் மீதும் றோயின் முன்னாள் உதவியாளரான கரி நெவில் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதேபோல், வெம்ப்ளி விளையாட்டரங்குக்காக 870 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களைச் செலவளித்தமையை "முட்டாள்தனமானது" என்றழைத்த அவர், இங்கிலாந்தின் இளவரசர் ஹரியை, "குழப்படிகாரப் பையன். மிகவும் குழப்படிகாரப் பையன்" என்று அழைத்தார்.
இந்தக் காணொளி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த இங்கிலாந்தின் கால்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கம், இதுகுறித்த முழுமையான விவரங்களைத் தருமாறு, டெய்லி டெலிகிராப் பத்திரிகையிடம் கேட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago