Editorial / 2022 ஜனவரி 24 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்
திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (24) அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியன இதனை ஏற்பாடு செய்திருந்தன.
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் எஸ்.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை, ஊடகவியலாளர் சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்தமையை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் சர்வதேச ரீதியில் அரசுக்கு அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன.
அத்துடன், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள், அரசு சார்பு கட்சியொன்றின் நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை, இவர் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.
மட்டக்களப்பு - குருமண்வெளியில் பிறந்த இவர், அம்பாறை - வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்ததுடன், பணி நிமித்தம் திருகோணமையில் தங்கியிருந்தார்.
பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக பணியாற்றினார்.
அத்துடன், சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றியதுடன், வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார்.
வீரகேசரியில் - எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றோ நியூசில் - ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Feb 2026