2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'இ.தொ.காவில் இணையேன்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் தான் இணையப் போவதில்லை என்று தெரிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்குக் கூட்டணியை பிளவுபடுத்த இடமளிக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

நான், மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணையப் போவதாகச் சிலர் பிரசாரம் செய்கின்றனர்.

அதுதொடர்பில் என்னிடம் பலரும் கேட்கின்றனர். அது பொய்ப் பிரசாரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 103ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இறம்பொடை ஆஞ்சநேயர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டேன். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், என்னுடைய அரசியல் தலைவன் மட்டுமல்லர், அவர் எனக்கு ஒரு மானசீக குரு. அவர் நேர்மையானவர். அதற்காக நான், அவருக்காக வழிபாடுகளில் ஈடுபட்டேன்.

இதற்காக, மலையக மக்கள் முன்னணியை விட்டு விட்டு நான், இ.தொ.காவில் இணையப் போவதாகக் கூறுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை' என்றார்.  

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (03) நடைபெற்ற, மலையக கலைத்துறை வரலாற்றில் நாடகத்துறைக்கே தன்னை அர்ப்பணித்து, தேசிய நாடகப் போட்டிகளில் பல விருதுகளை வென்ற புஸ்ஸல்லாவ மலையக நட்சத்திர கலைப் பேரவையின் தலைவர் மலையக வாசுதேவனின் மணி விழாவும் மலையக நாடக கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அங்கு வைத்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே, பெ. இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

'தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக, பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். அமைச்சர் பழனி திகாம்பரம், உத்தியோகபூர்விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் நாடுதிரும்பும் வரையில், அவ்வமைச்சின் பதிலமைச்சராக நானே கடமையாற்றுவேன். எங்களிடையே பிளவு என்றால், இது நடக்குமா? எங்களிடையே குழப்பத்தை உண்டாக்கிப் பிரிப்பதற்கான வேலைத்திட்டங்களை, மலையகத்தில் பலர் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களிடையே பிளவு இல்லை. அதேபோல, தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பிளவுபடுத்துவதற்கும் விடமாட்டேன்' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .