2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'பொதுத் தேர்தலுக்கு தயாராகுங்கள்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

எதிர்வரும் நான்கு வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று, தனிக்கட்சியாக ஆட்சியமைக்க வேண்டுமெனில், அதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும்' என, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கூறினார்.  
'எமது தனிப்பட்ட கருத்துக்களைவிட, கட்சியின் ஒற்றுமை, கட்டுப்பாடு, முன்னேற்றம் போன்றவற்றைக் கருத்திற்கொண்டு, எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் அனைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்' எனவும் அவர் கோரினார்.

நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று,  நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

'பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாம், உள்ளூராட்சிமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் சந்திக்கவுள்ளோம். இந்த இரண்டு தேர்தல்களிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் அங்கத்தவர்களையும் வெற்றி பெறச்செய்வதன் மூலமே, அடுத்து நான்கு ஆண்டுகளில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை, வெற்றிகரமாகச் சந்திக்க முடியும்.

இதனை எமது கட்சியின் அனைத்து மட்டத்திலும் இருப்பவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நாம் என்ன செய்தாலும், எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு தனியாக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. நாம் தனிக்கட்சியாக ஆட்சி அமைக்க வேண்டுமெனில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை  வெற்றிபெற வேண்டும். அதற்காக நாம் இப்போதிருந்தே  எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதற்காக, கட்சியின் அடிமட்ட அங்கத்தவர்கள் முதல், மேல் மட்டத்தில் இருக்கின்றவர்கள் வரை, அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டு, ஜனாதிபதியின் தலைமையில், அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதனூடாக, எமது கட்சியையும் நாம் பலப்படுத்த முடியும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியன்று, குருநாகல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கட்சியின் 65ஆவது மாநாட்டில், நாம் அனைவரும் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்புடனும்  கலந்துகொண்டு, எமது கட்சியின் பலத்தைக் காட்டவேண்டும். கட்சியில் அவ்வப்போது யார் தலைவராக இருக்கின்றார்களோ, அவர்களுடன் இணைந்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.

கீழ் மட்டத்திலுள்ளவர்களே கட்சியைப் பலப்படுத்த வேண்டும். ஏனெனில், நாம்  உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம்;. ஒற்றுமையாகச் செயற்படாவிட்டால், எமது உறுப்பினர்கள் வெற்றிபெற முடியாதுபோகும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால், எம்மீதும் கட்சியின் மீதும் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, அந்த நிலையைத் தவிர்த்துக்கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .