2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உலகளாவிய ரீதியில் பொருளாதார துறையில் 2012இல் இடம்பெற்ற விசேட நிகழ்வுகள்

A.P.Mathan   / 2013 ஜனவரி 03 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ச.சேகர்)

சவால்கள் நிறைந்ததாக 2012ஆம் ஆண்டு கடந்துவிட்ட நிலையில், உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற சில முக்கியமான நிகழ்வுகளை மீட்டுப்பார்க்கையில், 2012ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஈரானுக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை அறிவித்திருந்தது. இதன் எதிரொலியாக உலக நாடுகள் ஈரானுடன் நேரடியாக வர்த்தக தொடர்புகளை பேண முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஈரானில் எரிபொருள் வளங்களில் தங்கியிருந்த வளர்முக நாடுகள் பெரும் பின்னடைவையும் சந்தித்திருந்தன.

இதன் எதிரொலியாக ஈரான் - ஃபிரான்ஸ் நாட்டுக்கும், பிரித்தானியாவுக்குமான எரிபொருள் ஏற்றுமதியை 2012 பெப்ரவரியில் இடைநிறுத்தியிருந்தது. அத்துடன், பெப்ரவரி மாதத்தில் கிரேக்க அரசு நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு பிரதான காரணங்களாக இந்நாட்டில் பின்தொடரப்பட்டிருந்த ஒழுங்கமைப்பற்ற ஓய்வூதிய கொடுப்பனவு முறைகள் மற்றும் கட்டுங்கடங்காத பொதுதுறை சம்பள அதிகரிப்புகள் அமைந்திருந்தன.

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற மிகவும் மோசமான மின்சார பற்றாக்குறையின் காரணமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 620 மில்லியன் மக்கள் கடந்த ஜூலை மாதம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் வகையில் நாசா ஆய்வு கூடத்தின் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டிருந்த 'கியுரியோசிற்றி' எனும் ஆய்வு ரோபோ வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கி, மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் அங்கு காணப்படுவது குறித்த தகவல்களையும், படங்களையும் நாசா மையத்துக்கு அனுப்பியிருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் 'யூரோ' நெருக்கடி ஏற்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் தமது தொழில் வாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. விசேடமாக கிரேக்கத்தை தொடர்ந்து, அயர்லாந்து, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்லோவேனியா, ஸ்லோவாகியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த பொருளாதார நெருக்கடி நிலை மோசாமாக பாதித்திருந்ததுடன், பல வங்கிகள் நிதி நெருக்கடிகளுக்கும் முகங் கொடுத்திருந்தன. மேலும் மேற்படி நாடுகளில் அரச நிர்வாக முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் இயங்கிய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின் காரணமாக சுமார் 315 பேர் வரை உயிரிழந்திருந்ததுடன், 250இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

2012இன் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஏற்பட்ட சான்டி புயல் காரணமாக நியுயோர்க் நகரம் உள்ளிட்ட பெரும்பாலான வர்த்தக பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நாட்டின் அதிபராக பாரக் ஒபாமா தெரிவாவதற்கு முன்னர் இந்த இயற்கை அனர்த்தம் இடம்பெற்றதோடு, இதன் காரணமாக நியுயோர்க் பங்குச்சந்தையும் இரு தினங்கள் இயங்காமல் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2013இல் உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் இடம்பெறப்போகும் மாற்றங்கள் நிகழ்வுகள் பற்றி பார்க்கையில், 2013இல் இலங்கையை பொறுத்தமட்டில் சில முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. அதில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மாத்தறை வரை நீடிக்கப்படவுள்ளதுடன், கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலையும் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல விமான நிலையத்தின் நிர்மாண பணிகள் இவ்வருடம் பூர்த்தியடைந்து, செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சர்வதேச ரீதியில் உலகின் முதலாவது அலை மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் திட்டம் அமெரிக்காவின் ஒரெகன் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கானாவில் 55 மெகா வோற் மின்வலு கொண்ட ஆபிரிக்காவின் மிகப்பெரிய சூரிய சக்தியில் இயங்கும் மின் வலு உற்பத்தி நிலையத்தை நிறுவ பிரித்தானியாவை சேர்ந்த மின்சார உற்பத்தி நிறுவனமொன்று தீர்மானித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள ரோபோவை அனுப்பும் நடவடிக்கையில் இந்தியா 2013இல் ஈடுபட திட்டமிட்டுள்ளதுடன், சீனா - சந்திரனில் மனிதன் அல்லாத விலங்கினங்களை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

தொலைத்தொடர்பாடலை பொறுத்தமட்டில், இணைய சேவை பெற்ற கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை மடிக்கணினிகள் மற்றும் மேசைக்கணினிகளின் எண்ணிக்கையை விட முதல் தடவையாக அதிகரிக்கும் நிலை ஏற்படும். மருத்துவ துறையில் நெனோ தொழில்நுட்பம் அதிகளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .