.jpg)
மார்ச் மாதத்தில் 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய செலான் வங்கியானது, 2013 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 3 மாத காலப்பகுதியில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 728 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் மற்றுமொரு தடவை மனதில் பதியத்தக்க காலாண்டு நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 505 மில்லியன் என்ற மட்டத்தை அடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் அறிக்கையிடப்பட்ட ரூபா 399 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 26.7% அதிகரிப்பாகும். LKAS / SLFRS விதிமுறைகளுக்கு அமைவாக இடைக்கால நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவான கடன் கேள்வி மற்றும் இத்துறையில் பரவலாக நிலவிய வட்டிவீத எல்லைகள் மீதான அழுத்தம் போன்றவற்றுக்கு மத்தியிலும், 2013 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த 3 மாத காலப்பகுதியில் தேறிய வட்டி வருமானமானது ரூபா 2.16 பில்லியனாக 5.8% ஆக அதிகரித்துள்ளது. தராதர முற்பணங்களிலான தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சியின் விளைவாக இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ரூபா 384 மில்லியனாக காணப்பட்ட தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 2013 இன் 1ஆம் காலாண்டில் ரூபா 461 மில்லியனாக 20% இனால் அதிகரித்துள்ளது. இறக்குமதி சார்ந்த செயற்பாடுகளில் ஒட்டுமொத்தமான வீழ்ச்சியொன்று காணப்பட்ட போதிலும், வங்கியானது வேறு பல துறைகள் மற்றும் வியாபார வருமானம் உழைத்துத் தரும் சேவைகளை நோக்கி வர்த்தகத்தை பன்முகப்படுத்தியதால் இந்த அதிகரிப்பை அடைய முடிந்தது.
செலான் வங்கியானது தனது வைப்புத் தளத்தை ரூபா 146.7 பில்லியனில் இருந்து, இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் ரூபா 150.1 பில்லியனாக அதிகரித்துக் கொண்டுள்ளது. வைப்புக்கள் மீதான கடுமையான போட்டிநிலை மற்றும் உயர்ந்த மட்டத்திலான வட்டிவீத சூழல் போன்றவற்றுக்கு மத்தியிலும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 3 மாதங்களில் வங்கியின் தேறிய முற்பண தொடர் ரூபா 124.7 பில்லியனில் இருந்து ரூபா 125.9 பில்லியனாக அதிகரித்துள்ளது.
வங்கி முன்னெடுத்த ஒருமுகப்படுத்தப்பட்டதும் ஸ்திரமானதும் செயற்றிறன் மிக்கதுமான மீளப்பெறல் நடைமுறைகளின் ஊடாக தனது சொத்து தரத்தை மேம்படுத்திக் கொள்ள இயலுமாகியுள்ளது. இது, வங்கியானது தனது மொத்த செயற்படா சொத்துக்களை (NPA) 2013 இன் 1ஆம் காலாண்டில் மேலும் ரூபா 421 மில்லியனால் குறைத்துக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது.
செலான் வங்கியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஹால் ஜயமன்ன கூறுகையில், '2013 இன் 1ஆம் காலாண்டு காலப்பகுதியில் வரிக்குப் பின்னரான இலாபத்தில் 26.7% அதிகரிப்பொன்றை பதிவு செய்யததன் மூலம் வங்கியானது இன்னுமொரு உறுதிமிக்க காலாண்டு நிதிச் செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. நாம் வகுத்த உபாய திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட பலாபலன்களை தொடர்ந்தும் பெற்றுத் தந்தவண்ணம் இருப்பதை இப் பெறுபேறுகள் உறுதி செய்கின்றன' என்றார்.
2013 மார்ச் 31ஆம் திகதியன்று இருந்தபடி செலான் வங்கியின் சேவை வலைப்பின்னல் 147 கிளைகளையும் 154 ATM மையங்களையும் 81 மாணவர் சேமிப்பு நிலையங்களையும் கொண்டியங்குகின்றது.
எதிர்கால வளர்ச்சிக்காக தயாராகும் பொருட்டு, வழங்கல் ஆரம்பித்த தினத்திலேயே மிகையாக கோரப்பட்ட வெற்றிகரமான தொகுதிக்கடன் பத்திர வழங்கலை கடந்த பெப்ரவரி மாதத்தில் மேற்கொண்டதன் மூலம் செலான் வங்கியானது 2 பில்லியன் இலங்கை ரூபா நிதியை திரட்டிக் கொண்டது. வங்கியின் எதிர்கால வளர்ச்சியுடன் தொடர்புபட்டதாகவுள்ள அடையாளங் காணப்பட்ட முக்கிய விடயங்களில் முதலீடுகளை மேற்கொள்வதிலும் வங்கி முனைப்புடன் இருக்கின்றது.
வங்கியின் உபாய ரீதியிலான திட்டங்களுள் புதிய பொருள் அபிவிருத்தி, கிளை விஸ்தரிப்பு, சேவைத் தர மேம்படுத்தல், ஊழியர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மேம்படுத்தல் போன்றனவும் உள்ளடங்குகின்றன.
2013 முதலாம் காலாண்டின் இறுதியில் இருந்தவாறு, செலான் வங்கியின் மொத்த 'மூலதன போதுமானதன்மை வீதமானது' 14.08% ஆக காணப்பட்டது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதிக்கடன் பத்திர (ரூபா 2 பில்லியன்) வழங்கலின் பெறுமதியானது 2013இன் 1ஆம் காலாண்டின் மொத்த 'மூலதன போதுமானதன்மை' கணிப்பீட்டிற்காக உள்வாங்கப்படவில்லை. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 2013 ஏப்ரல் மாதத்திலேயே அனுமதியை பெற்றுக் கொண்டமையே இதற்குக் காரணமாகும். இந்த நிதித்தொகை உள்ளடக்கப்படுமாயின், செலான் வங்கியின் மொத்த மூலதன போதுமானதன்மை வீதமானது 15.5% இனையும் தாண்டிச் செல்வதுடன், உள்நாட்டு வங்கியியல் துறையில் மிகவுயர்ந்த ஒரு மட்டமாகவும் திகழும்.
கடந்த வருடத்தின் தொடர்புபட்ட காலாண்டில் ரூபா 1.18 ஆக காணப்பட்ட பங்கொன்றின் மீதான வருமானம், செலான் வங்கி இக்காலாண்டில் பெற்றுக் கொண்டுள்ள மனதில் பதியத்தக்க செயற்பாடுகளின் பிரதிபலனாக ரூபா 1.49 ஆக உயர்வடைந்துள்ளது. சொத்துக்கள் மீதான வருமானம் (வரிக்கு முன்னரான இலாபம்) மற்றும் உரிமம் மீதான வருமானம் போன்றன முறையே 1.54% ஆகவும் 10.57% ஆகவும் காணப்படுகின்றன.
செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் எம்முடன் தொடர்புபடுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு மேம்பட்ட பெறுமதியை வழங்குவதில் நாம் கொண்டுள்ள முழுமையான அர்ப்பணிப்பே, உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் சவால்மிக்க புறச்சூழல் காணப்பட்ட போதிலும் கூட எமது வளர்ச்சிக்கான உத்வேகத்தை நாம் பேணிக்கொள்வதை சாத்தியமாக்கியுள்ளது. எமது சேவைகளின் புத்தாக்கம் மற்றும் மேம்படுத்தல், எமது கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரித்தல் மற்றும் முன்னேற்றுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவும் அதேபோல், பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு 'சாதாரண முறைமையையும் விட மேலான' ஈடிணையற்ற சேவையை தொடர்ச்சியாக வழங்குவதன் ஊடாகவும் மேற்படி சாதகமான போக்கினை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு நாம் முழுமையான ஈடுபாட்டுடன் இருக்கின்றோம்' என்றார்.
இக் காலாண்டில் செலான் வங்கி மிகச்சிறந்த தோற்றப்பாட்டினை அடைந்து கொண்டுள்ளது. அதன் பயனாக வங்கியின் வர்த்தக குறியீட்டு பெறுமானமும் (Brand Equity) மேம்பட்டுள்ளது. விஷேட வர்த்தக குறியீடுகள் பதிப்பாக 2013 ஏப்ரலில் வெளியான LMD சஞ்சிகையினால் இலங்கையிலுள்ள முன்னணி 20 வர்த்தகக் குறியீடுகளுள் ஒன்றாகவும் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் உறுதிமிக்க வர்த்தகக் குறியீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக செலான் வங்கி கொண்டுள்ள உயர் அந்தஸ்து மேலும் பலப்பத்தப்பட்டுள்ளது.