
அண்மையில் இந்தியாவின் முன்னணி பாவனையாளர் நுகர்வுப்பொருட்கள் தயாரிக்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான டாபர் லங்கா (பிரைவட்) நிறுவனமானது இலங்கையில் பழரச குளிர்பான உற்பத்தி ஆலையை திறந்து வைத்திருந்தது.
உள்நாட்டில் டாபர் நிறுவனத்தினால் தொடங்கப்படும் இப் புதிய உற்பத்தி ஆலையை இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளின் ஆரம்ப விழாவில் இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா, டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆனந்த் சி பர்மன் மற்றும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுனில் டக்கல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை முதலீட்டு சபையுடனான உடன்படிக்கைக்கு அமைய, இப் புதிய உற்பத்தி ஆலையானது 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி ஆரம்ப முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படுவதுடன், ஒவ்வொரு மாதமும் 2.8 இலட்சம் பழரச வகை குளிர்பான கேன்கள் உற்பத்தி செய்யக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இப் பசுமை திட்டமானது யக்கடகல எஸ்டேட், கொட்டதெனியாவ, கம்பஹா மாவட்டம், மிஹிரிகம பிரதேசத்தில் அமைந்துள்ளது.
'இலங்கையிலுள்ள எமது ஆலையானது டாபர் நிறுவனத்திற்கு மிக முக்கிய மைல்கல்லாக அமையும்' என டாக்டர்.ஆனந்த் சி பர்மன் தெரிவித்தார். மேலும் அவர் 'நான் இலங்கை அரசு, இந்த ஆலையின் நிர்மாணப்பணிக்கு உதவிய பணியாளர்கள் மற்றும் உள்நாடு மற்றும் ஏற்றுமதிச் சந்தை ஆகிய இரண்டு துறைகளிலும் நமது வெற்றிக்கு வழிகாட்டியவர்களையும் அங்கீகரிக்க விரும்புகிறேன்' என்றார்.
இலங்கையில் அமைந்துள்ள இப் புதிய ஆலையானது உத்தியோகபூர்வமாக 75 பணியாளர்களுடன் மே மாதம் தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் காணப்படும் கேள்வி மற்றும் விரிவாக்கல் திறனுக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலும் நூற்றுக்கணக்கானவர்களிற்கு மறைமுக வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
இப்புதிய ஆலையானது பசுமை கோட்பாடுகளுக்கு இணங்க சுற்றுச்சூழலிற்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவு கண்காணிப்பு மற்றும் தொடர்ந்தும் ஆலையின் கழிவு அகற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் டாபர் லங்கா நிறுவனமானது கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை முதலீட்டு சபையுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. 'எமது ரியல் வர்த்தகநாமத்தின் கீழ் தயாரிக்கப்படும் பழரச ஜூஸ் வகைகள் மற்றும் குளிர்பானங்கள் குறித்த கேள்வி ஒவ்வொரு மாதமும் அதிகரித்தன. விநியோக கட்டுப்பாடுகள் காணப்படினும் டாபர் நிறுவனத்தின் உணவு தயாரிப்புகள் 2012-13 ஆண்டுக்கான வளர்ச்சி 25 சதவீதத்தை எட்டியிருந்தது. எதிர்காலத்திலும் இவ் வகையான உயர் வளர்ச்சியினை எதிர்பார்த்துள்ளோம். எனவே தான் நாம் எமது பழங்கள் சார்ந்த உற்பத்தி திறனை அதிகரிக்கவும் மற்றும் எமது தயாரிப்பிற்கான கேள்வியை அதிகரிக்கும் நோக்கிலும் இப்புதிய ஆலையை நிர்மாணித்துள்ளோம். இலங்கையில் உற்பத்தி வசதியை கட்டியெழுப்புவது டாபர் நிறுவனத்தின் மூலோபாய முடிவாக அமைந்துள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தி பிரசன்னமானது போட்டித்திறனை எதிர்கொள்ள உதவியாக அமையும்;' என சுனில் டகல் தெரிவித்தார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.