
SLASSCOM மூலம் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த CXO செயலமர்வின் போது, பிரதான கருத்துரையை வழங்கிய லீப்செட் நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் ஜிம் ஓ'கொன்னர், eவணிகத்தின் எதிர்காலம் குறித்த பல முக்கிய விடயங்களை முன்வைத்திருந்தார். இந்த செயலமர்வானது, eவணிகத்துறையில் தற்போது காணப்படும் வாய்ப்புகள், எதிர்காலத்தில் இந்த துறையில் இடம்பெறக்கூடிய அபிவிருத்திகள் மற்றும் நிபுணர்களின் எதிர்வுகூறல்கள் குறித்த பல விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன. இதன் போது கருத்து தெரிவித்திருந்த லீப்செட் நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் ஜிம் ஓ'கொன்னர் கையடக்க மொபைல் வணிக சந்தை வாய்ப்பு, மொபைல்களில் பார்வையிடக்கூடிய இணையத்தளங்களின் பெருக்கத்தின் மூலம் வாடிக்கையாளாகளுக்கு அவர்களின் கணனிகளின் மூலமான தேவைகளை கையடக்க தொலைபேசிகளின் மூலமாக நிவர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தமை, ஒன்லைன் - ஓஃவ்லைன் (o2o) சந்தை முறை மற்றும் மொபைல் கொடுப்பனவு முறைகளை ஏற்கும் அப்பிள் பாஸ்புக் மற்றும் கூகுள் வொல்லட் போன்றன பெருமளவு அனுகூலங்களை வழங்கக்கூடியனவாக அமைந்துள்ளன என தெரிவித்திருந்தார்.
ஜிம் ஓ'கொன்னர் இணைய பொருட்கள் நிர்வாகத் துறையில் சுமார் 12வருடகாலத்துக்கும் மேற்பட்ட கால அனுபவத்தை கொண்டுள்ளார். லீப்செட் நிறுவனத்தில் இடம்பெறும் அனைத்து புதிய பொருட்களின் வடிவமைப்பு, வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் நுகர்வோர் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு பொறுப்பானவராக செயலாற்றி வருகிறார். நிதித்துறை சேவைகள் மற்றும் நவணிகம் போன்ற செயற்பாடுகளில் பரந்த அனுபவத்தை கொண்டுள்ள இவர், லீப்செட் நிறுவனத்துடன் இணை;ந்து கொள்ளும் முன்பாக மொன்வியா எல்எல்சி நிறுவனத்தின் பொருட்கள் பிரிவின் உப தலைவராக செயலாற்றியிருந்தார். Yahoo நிறுவனத்தின் பொருட்கள் நிர்வாக பிரிவின் பணிப்பாளராகவும் செயலாற்றியிருந்த இவர், Yahoo நிதி பொருட்கள் குழுவுக்கும் தலைமை தாங்கியிருந்தார். இந்த பிரிவு 7 ஆண்டு காலப்பகுதியில் பெருமளவு வளர்ச்சியை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'o2o என்பது தற்போது மிகவும் ஆரம்ப நிலையில் காணப்பட்ட போதிலும், சில நிறுவனங்கள் உறுதியான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றன. உதாரணமாக, மிகப்பெரியளவிலான விற்பனை நிலையங்களாக திகழும் டார்கெட் மற்றும் பெஸ்ட் பை போன்றன இணையத்தளங்களின் ஊடாகவே காட்சியறைகளில் காணப்படும் பொருட்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அது போன்று ஸ்டார்பக்ஸ் விசேட அன்பளிப்பு அட்டை ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது. பாஸ்போர்ட் மற்றும் வொல்லட் சேவைகளான கூகுள் வொல்லட், iOS பாஸ்புக் மற்றும் பேபால் போன்றன இந்த o2o தொடரை வெற்றிகரமாக முன்னெடுக்க பெருமளவு உதவி வருகின்றன' என்றார்.
இந்த நிகழ்வில் SLASSCOM அமைப்பின் தலைவரும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரியுமான சுஜீவ தேவராஜ கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நபரும் ஆகக்குறைந்தது ஒரு கையடக்க தொலைபேசியையேனும் கொண்டுள்ளார். ஸ்மார்ட் போன்களின் பாவனையும் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்த நிலையில், நவணிகமானது சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளது. இலங்கையை சேர்ந்த வர்த்தக தலைவர்களும், தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த நிபுணர்களும், சர்வதேச நவணிக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதற்கான தருணம் எழுந்துள்ளது' என்றார்.
இந்த உரையை தொடர்ந்து, அனைவரின் பங்குபற்றலுடனான இலங்கை சந்தையில் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் போக்குகள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய கருத்தரங்கொன்றும் இடம்பெற்றிருந்தது. இந்த கருத்தரங்கில் சோன் 24/7 நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லிவன் பெர்னான்டோ, WSO2 நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி போல் ப்ரீமன்டில், கப்ருகா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துலித் ஹேரத், கூகுள் தெற்காசிய பிராந்தியத்துக்கான சந்தை அபிவிருத்தி பணிப்பாளர் ஜேன் லீவெனி மற்றும் லீப்செட் நிறுவனத்தின் ஜிம் ஓ'கொன்னர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்த செயலமர்வின் மேற்பார்வை நடவடிக்கைகளை றிட்கிறெஸ்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் பெர்னான்டோ மேற்பார்வை செய்திருந்தார். அத்துடன் இந்த நிகழ்வை SLASSCOM நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இம்ரான் ஃபுர்கான் முன்னெடுத்துச் சென்றிருந்தார்.