2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'இது தான் என் கனவு'

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 20 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்புஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் சிம்பாப்வே அணிக்காகச் சமநிலையைப் பெற்றுக் கொடுத்த நாயகனான டொனால்ட் டிரிபானோ, தனது கனவு இதுவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புலவாயோவில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு கட்டத்தில் 32 பந்துகளில் 8 விக்கெட்டுகள் கைவசமிருக்க 37 ஓட்டங்கள் தேவை என்ற பலமான நிலையில் காணப்பட்ட போதிலும், பின்னர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 49ஆவது ஓவரில் 10 ஓட்டங்கள் குவிக்கப்பட, 5 விக்கெட்டுகள் கைவசமிருக்க, 4 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலைமை, மேற்கிந்தியத் தீவுகளுக்குக் காணப்பட்டது.

அந்த ஓவரை வீச அழைக்கப்பட்ட டிரிபானோ, அதற்கு முன்னர் 10ஆவது ஓவரையே வீசியிருந்தார். 50ஆவது ஓவரின் முதலாவது பந்தில் ஓர் ஓட்டம் பெறப்பட்டது. 2ஆவது பந்தில், அதிரடி வீரரான கார்லொஸ் பிறெத்வெய்ட் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் அடித்த பந்து, மறுமுனையில் நின்ற ஆஷ்லி நேர்ஸை, ரண் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது. 4ஆவது பந்தில் காலில் பட்ட பந்து மூலமாக ஓர் ஓட்டம் பெறப்பட்டது. எனவே, 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 5ஆவது பந்தில் உயர அடிக்கப்பட்ட பந்து மூலமாக, ஓர் ஓட்டம் பெறப்பட, ஓட்டங்களின் எண்ணிக்கை சமனானது. இறுதிப் பந்தை அற்புதமாக வீசிய டிரிபானோ, அதிலிருந்து ஹோல்டர் ஓட்டங்கள் பெறுவதைத் தடுத்தார். விக்கெட் காப்பாளரிடம் சென்ற பந்தில் ஓட்டங்கள் பெற முயலப்பட, ரண் அவுட் பெறப்பட்டது. எனவே, போட்டி சமநிலையில் முடிந்தது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட 34ஆவது சமநிலை முடிவு இதுவாகும். இவ்வாண்டில் பெறப்பட்ட, அவ்வாறான 2ஆவது முடிவு. இதற்கு முன்னர் நொட்டிங்காமில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி, சமநிலையில் முடிவடைந்திருந்தது.

சமநிலை முடிவைப் பெற்றுக் கொடுத்த டிரிபானோ கருத்துத் தெரிவிக்கையில், "என்னைப் பொறுத்தவரை, இது என் கனவு. எனக்கு நானே கதைத்துக் கொண்டிருந்தேன். 'சிறிய வயது முதல் நான் காத்திருந்த சந்தர்ப்பம் இது தான்' என நான் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .