2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அபு தாபியில் ஹமில்டனுக்கு வெற்றி: F1 பட்டம் வென்றார் றொஸ்பேர்க்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 27 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க் தனது முதலாவது போர்மியுலா வண் பட்டத்தை வென்றுள்ளார். அபு தாபியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற பந்தயத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றதைத் தொடர்ந்தே, தனது முதலாவது போர்மியுலா வண் பட்டத்தை றொஸ்பேர்க் வென்றார்.

அபுதாபியில் இடம்பெற்ற மேற்படி பந்தயத்தில், றொஸ்பேர்க்கின் சக மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வெற்றிபெற்றார்.

இப்பந்தயத்தில் ஹமில்டன் வென்று, மூன்றாமிடத்துக்குப் பின்னால் றொஸ்பேர்க் வென்றால் ஹமில்டன் வெல்லலாம் என்ற நிலையில், மற்றைய போட்டியாளர்களை தனக்கும் றொஸ்பேர்க்குக்குமிடையில் கொண்டு வரும் முயற்சியில் மெதுவாகவே காரினைச் செலுத்தியிருந்தார்.

வேகத்தினை அதிகரிக்குமாறு, மெர்சிடிஸ் அணியினால் பலமுறை அறிவுறுத்தப்பட்டும், அணியின் கட்டளைகளுக்குப் பணியாத ஹமில்டன், தங்களை பந்தயத்தில் ஈடுபட விடுங்கள் என்று கூறியிருந்தார்.

இப்பந்தயத்தில் மூன்றாமிடத்தைப் பெற்ற பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலிடமிருந்து றொஸ்பேர்க் அழுத்தத்தை எதிர்கொண்டபோதும், வெட்டலை முந்த விடாமல் செய்து இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.

பந்தயத்தின் ஆரம்பம் முதலே முன்னணியிலிருந்த ஹமில்டன், றொஸ்பேர்க்கை தாமதப்படுத்தும் எந்தவித உத்தி விளையாட்டுகளிலும் ஈடுபட வேண்டாமென்று மெர்சிடிஸ் அணியால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும், அதைக் கருத்திலெடுக்காத ஹமில்டன், வெட்டலையும் றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பனையும் றொஸ்பேர்க்கை நெருங்கச் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில், ஏதாவது செய்வது குறித்து கருத்திற் கொள்ளுமாறு  றொஸ்பேர்க் ரேடியோவில் கூறியிருந்தார். இந்நிலையில், ஒரு சந்தர்ப்பத்தில், மெர்சிடிஸ் அணியின் நிறைவேற்றுப் பணிப்பாளரான படி லோவ்வே ஹமில்டனைத் தொடர்பு கொண்டு, வேகத்தை அதிகரிக்குமாறு கூறியிருந்தார். எனினும், அதற்கு பதிலளித்த ஹமில்டன், தான் முன்னணியில் இருப்பதாகவும், தான் இப்போதிருப்பது தனக்கு மிகவும் வசதியாகவுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .