2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'கிழக்கில் பெரும்பான்மை இனத்தின் சமபலத்தை ஏற்படுத்துவதற்காக அரசு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மே

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (எம்.சுக்ரி)
'கிழக்கில் தற்போது காணப்படும் தமிழ், முஸ்லிம் மக்களின் பொரும்பான்மையை குறைத்து பொரும்பான்மை இனத்தை அதிகரித்து சமபலத்தை ஏற்படுத்துவதற்காக அரசு பல்வேறு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் பிரதிபளிப்பே இன்று கிழக்கில் பரம்பரை பரம்பரையாக தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த சில கிராமங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது' என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்

காத்தான்குடியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிஸிற்குமே வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்ய முடியும்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்களும், முஸ்லிம்களுமே வாழ்ந்து வருகின்றனர். இம்மாகாணத்தில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் இந்த நாட்டின் பெரும்பான்மை இனம் கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களை அவர்களோ அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகளோ ஆளுவதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. ஆகவே அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒவ்வொரு தமிழர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸிற்குமே வாக்களித்தாக வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பொரும்பான்மையாக வாழ்ந்து வரும் தமிழர்களும், முஸ்லிம்களும்  தங்களை தாங்களே ஆள வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.

இந்த அரசோடு கைகோர்த்துக் கொண்டு நாங்களே தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என மார் தட்டிக் கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தங்களது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளையும் தடுத்து நிறுத்துவதற்கு எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் கைப் பொம்மைகளாக இருந்த வரலாற்றை எவரும் மறக்க முடியாது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் மிக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களையும் முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்கு முறையினையும் தடுத்து நிறுத்துவதற்கு உண்மையாகவே தமிழ், முஸ்லிம் மக்களின் மீது அக்கறை காட்டுகின்ற அவரவர் இனம் சார்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமே தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதன் மூலம் தங்களது தலையெழுத்தை தாங்களே நிர்ணயித்துகொள்ளப்போவதோடு தங்களது இனங்களுக்கான மிகக் குறைந்த பட்ச அரசியல் அதிகாரங்களை அவர்கள் இடும் புள்ளடிகளே எழுதப்போகின்றது .

அத்தோடு இத்தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் என்ன தீர்மானத்தினை எடுக்கப்போகின்றார்;கள் என சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றது. இதேவேளை இத்தேர்தலில்; தமிழ் முஸ்லிம் மக்கள் எடுக்கப்போகும் தீர்மானம் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்கும் என்பதில் எதுவித ஐயமும் இருக்க முடியாது.

அது அவ்வாறு இருக்க மறுபுரத்தில் இந்தத் தேர்தலை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் ஒரு முறை கிழக்கு மாகாண சபையை என்ன விலை கொடுத்தாயினும் கைப்பற்றி ஆக வேண்டும். தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தை ஆளுகின்ற ஆனையை வழங்கியுள்ளனர் என சர்வதேச சமூகத்திற்கு காட்டி அரசியல் தீர்வுத்திட்டத்தினை முன்வைக்காமல் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் முயற்சித்து வருகின்றது. 

அதற்காகவே கடந்த கிழக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் இன்னுமொரு வருடம் இருக்கத்தக்க முன்கூட்டியே மாகாண சபையை கலைத்து  தேர்தலை நடத்த அரசு  திட்டமிட்டுள்ளதோடு தேர்தல் விதிகளுக்கு மாறாக அரசாங்கம் வெற்றிபெறுவதற்கு கிழக்கு மாகாணம் முழுக்க பல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த அபிவிருத்தி திட்டத்தினுடாக தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை அரசு பெற்றுக் கொள்வதற்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகளை சிதறடித்து அதன் மூலம் வெற்றியை தடுப்பதற்கும் தமிழ், முஸ்லிம் சமூகத்தின் ஏஜன்டுகளை அரசாங்கம் கலம் இறக்கி விட்டுள்ளது.

இவ்விடத்தில்தான் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அபிவிருத்திகளுக்கும் சலுகைகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் தேர்தலாக இத்தேர்தலை கருதாமல் இந்த அரசு அபிவிருத்திகளைக் காட்டி எமது உரிமைகளை பறிப்பதற்கு மேற்கொள்கின்ற ஒரு தந்திரோபாயமே இந்த அபிவிருத்தி என்பதை உனர்ந்து கொள்ள வேண்டும். 

எங்களை நாங்களே ஆளுவோமானால் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே கடந்த பல வருடங்களாக இருந்து வரும் காணிப் பிரச்சினைகளுக்கும், எல்லைப் பிரச்சினைகளுக்கும் மிக இலகுவாக எமது அரசியல் பிரதிநிதிகளும் புத்தி ஜீவிகளும், சிவில் சமூகத்தவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஏன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது. எதற்கு எமக்கு அடுத்த இனத்தின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்.

எனவே இந்தத் தேர்தலை தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைக்கும் இரண்டு சமூகங்களின் ஒற்றுமைக்கும் இருந்து வரும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .