2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த இடமளிக்க வேண்டாம்'

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

'1948ஆம் ஆண்டு சுதந்திர காலத்தின் பின் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று 2, 3 ஆக உடைந்தும் பிளவுப்பட்டும் காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுப்பட்டிருப்பதை மலையக மக்கள் முன்னணி விரும்பவில்லை.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி இந்த கட்சியை பிளவுப்படுத்த இடம் கொடுக்க கூடாது என்பதை நாம் விரும்புகின்றோம்' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 'நல்லாட்சி அரசாங்கம் இரண்டு பலம் பொருந்திய கட்சிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும். இன்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்னும் நான்கு வருடங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தை  அசைக்க முடியாது. அதேவேளை இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு எவர் முற்பட்டாலும் அவர்கள் முதலில் வீடு நோக்கி சென்று விடுவார்கள்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்களை நேரடியாக தேடி சென்று இவ்வாறான மக்கள் சந்திப்பை ஏற்படுத்தி வருகின்றது. கூடுதலாக தொழில் விடயம் சம்மந்தமாகவே இன்று இங்கு வருகை தந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எமது சேவையில் தொழில் சேவையும் ஒன்றாகும்.

வெகு விரைவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோட்டப்பகுதி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் முகமாக முதல் முறையாக இந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்டிய இந்த நாளில் ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் முகமாகவும், இதே தினத்தில் மக்கள் சேவையின் ஊடாக பாடசாலைகளுக்கு 7 இலட்சம் ரூபாய் செலவில் எழுதும் பலகை வழங்கி வைக்கப்படுகின்றது.

மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இருந்து எனது நீண்ட கால கனவாகிய மலையக கல்வியை அபிவிருத்தி செய்யும் இலக்கு இப்பொழுது நனவாகி வருகின்றது.

மாகாண சபையின் ஊடாகவே இந்த அபிவிருத்தி பணிகள் பாடசாலைகளுக்கு செய்ய முடியும் என்பதை கொண்டு எதிர்வரும் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் மத்திய மாகாண சபையின் ஊடாக செய்யப்படும் என்பதை இங்கு தெரிவிக்கின்றேன்' என்றார்.

இந்த மக்கள் சந்திப்பில் 100க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் கல்வி, தொழில் வாய்ப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஆராயப்பட்டு உடனுக்குடன் தீர்க்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .