2025 ஜூலை 19, சனிக்கிழமை

“நிலங்களை பகர்ந்தளிக்கும்போது பிரதேச மக்களுக்கு முன்னுரிமையளிக்கவும்”

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நிலங்களை பகர்ந்தளித்து தோட்டங்களை அபிவிருத்தி செய்தால்தான், பெருந்தோட்டத்துறையை காப்பாற்ற முடியும். ஆனால், நிலங்களை பகர்ந்தளிக்கும்போது, பிரதானமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எஞ்சும் நிலப்பகுதியை மட்டும், வெளியிடங்களில் இருந்து வரும் மக்களுக்கு பகர்ந்தளித்தால் சாலச்சிறந்தது” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

“கண்டி மாவட்டத்தில் காணப்படும் பெரும்பாலான பெருந்தோட்டங்கள் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டயாக்கம் ஆகிய அரச நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த பெருந்தோட்டங்களில் பெரும்பாலானவை பயிரிடப்படாத கைவிடப்பட்ட நிலங்களாக உள்ளன. இந்த நிலங்களை, காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக பொறுப்பேற்று, மீண்டும் பகர்ந்தளிக்கும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த காணிகளில் பயிர்செய்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலும், அங்கு வாழ்ந்த மக்கள் இன்னும் அந்த தோட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு காலங்காலமாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றி, வெளியிடங்களில் வாழும் மக்களை இந்த நிலங்களில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக கண்டி, தெல்தெனிய பிரதேச சபைக்குட்பட்ட இரஜவெல்ல, வெவதென்ன, வீரியகொல்ல, வைத்தலாவ போன்ற தோட்டங்கள், பயிரிடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. ஆனால், அந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் இன்றும் அங்குதான் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு மக்கள் வாழும் நிலங்கள் உட்பட அனைத்து பயிரிடப்படாத பெருந்தோட்ட நிலங்களையும் பொறுப்பேற்று, வெளியிடங்களில் வாழும் மக்களுக்கு வழங்கி அவர்களை இந்த இடங்களில் குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிய வருகின்றது.

நிலங்களை பகர்ந்தளித்தால்தான் பெருந்தோட்டத்துறையையும் காப்பாற்ற முடியும் என்ற நிலை காணப்படுகின்றது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நிலங்களை பிரித்து வழங்கும்போது, பிரதானமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பகர்ந்தளிக்கப்பட வேண்டும். எஞ்சும் நிலப்பகுதியை வெளியிடங்களில் இருந்து வரும் மக்களுக்கு பகர்ந்தளித்தால் சாலச்சிறந்தது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X