2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மீரியபெத்த விவகாரம்: பொங்கலுக்கு 25 வீடுகள் கிடைக்காது

Kogilavani   / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

பூனாகலை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களுக்கான வீடமைப்புப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஊவா மாகாண வீடமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான், நேற்று(11) கூறினார்.

'வீடமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் வீடுகளின் திறப்புகளை மக்களுக்கு கையளிக்கலாம். ஆனால், அம்மக்களை உரிய முறையில் அவ்விடத்தில் குடிமர்த்த வேண்டும். வீடுகளுக்கான ஒப்பனைகள் கையளிக்கப்பட வேண்டும்;. வீடுகளுக்கான அளவீடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இவை அனைத்தையும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் என்பன உரிய முறையில் பெற்றுகொடுத்து, அதன் பின்னரே ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் அவை மக்களுக்கு கையளிக்கப்படும்' எனவும் அவர் கூறினார்.

'இழுபறியிலிருந்த மீரியபெத்த வீடமைப்புத் திட்டத்துக்கான தடைகளை நானே தகர்த்தெறிந்தேன். மண்சரிவில் பாதிக்கப்பட்டு, ஒரு வருட காலமாக இடைத்தங்கல் முகாமில் வசித்து வரும் 75  குடும்பங்களுக்கும் தைப்பொங்கல் தினத்துடன், புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என அவர் கடந்த நவம்பர் மாதம் பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

பொங்கல் தினம் அண்மித்துள்ள நிலையில் மீரியபெத்த வீடமைப்பு தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'மீரியபெத்த மக்களுக்கு பொங்கலுக்கு முன்னர் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென நான் கூறியது தற்போது நடந்துகொண்டுள்ளது. மக்களிடம் வீடுகளை கையளிப்பதற்கு அரச அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டும்.

மீரியபெத்த வீடமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்தில் நான்கு வீடுகளை மட்டுமே அமைச்சர்களால் கட்ட முடிந்தது. ஆனால், நான் பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே 46 வீடுகளை கட்டி முடித்துவிட்டேன். இவ்வீடமைப்பு திட்டம் மேற்படி அதிகாரிகளின்  கைகளில் இருந்திருக்குமேயானால் 50 வீடுகளையும் கட்டி முடிக்க 10 வருடங்கள் தேவைப்பட்டிருக்கும்' என அவர் மேலும் கூறினார். மீதமுள்ள 25 வீடுகளுக்கான நிர்மாண பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இவ்வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டுக்குள் நிறைவுசெய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .