2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மலையகத் தமிழர்களின் நலன்களும் உள்ளடங்கினால் 'அநீதிகளுக்கு முடிவு கட்டலாம்'

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

'அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலலமைப்புச் சீர்திருத்தத்தில், 1.6 மில்லியன் மலையகத் தமிழர்களின் நலன்களும் உரிமைகளும் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும். இதன் மூலம், வரலாற்று ரீதியான அநீதிகளுக்கு முடிவுகட்ட முடியும். இதற்காக அமைப்பொன்றை  உருவாக்கியுள்ளோம்' என, பேராதனைப் பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஜனநாயகத்துக்கான  மலையக அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.விஜேசந்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் 3ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பில் 36க்கும்  மேற்பட்ட மலையக சிவில் அமைப்புகள், ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக, ஹட்டனில் 2ஆவது முறையாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு 9 அம்சங்கள் கொண்ட தீர்மானங்களை எடுத்துள்ளன.

இது தொடர்பில் விளக்கமளிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பு  ஹட்டன் டைன் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர்  பி.ஏ.காதர், முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ், ஜனநாயகத்துக்கான மலையக அமைப்புகள் அமைப்பின் குழு செயலாளர் பொன்.பிரபாகரன் உள்ளிட்ட பல சிவில் அமைப்பு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் படி அதிகாரங்கள் பகிரப்படும் போது, மலையகத்தில் 1.6 மில்லியன் தமிழர்களுக்கு ஏற்புடைய அதிகார பரவலாக்கல் கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கியமாக விடயமாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் போது, மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் 17 ஆக அதிகரிக்க அரசியல் யாப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் போது வாய்ப்புக் கிடைக்கும். இதன்போது புதிய தேர்தல் முறைமை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கேற்ப தேர்தல் தொகுதிகள், உருவாக்க வேண்டும்.

மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, ஆகிய மாவட்டங்களில் தெளிவான தனி உறுப்பினர் தொகுதிகளும் கலப்பு உறுப்பினர் தொகுதிகளும் வடிவமைக்கப்பட்ட வேண்டும்.

விகிதாசார முறைமைக்கான தெரிவு மாவட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மலையகத் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் நியாயபூர்வமாகவும், சமத்துவமான முறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

புதிய யாப்பின் மூலம் நாட்டில் நீடித்த ஜனநாயகம், சமத்துவம் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.  இக்குறிக்கோளை அடைவதற்காகவும், மலையக தமிழ் மக்களுக்கெதிரான வரலாற்று ரீதியான தவறுகளை சீர்திருத்தம் செய்வதற்கும் அவசரமாக முன்வந்து செயலாற்றுமாறு அனைத்து அரசியல், தொழிற்சங்க, சமூக மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் இவ் அமைப்பு இதன்போது வேண்டுகோள் விடுத்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .